வந்தபின் காக்கும் ‘சிஸ்டமும்’ வராமலே போகவுள்ள வடக்கிற்கான விசேட மகளிர் சிகிச்சை மையமும். மு.கார்த்திகேசு

கடந்த மாசி மாத ஆரம்பத்தில் ஒருநாள். மூசிப் பெய்த பனியுடன் விடிந்த காலை நேரத்தில் “புதிய கட்டிடத்திற்கு கரண்ட் லைன் எடுக்க எண்டு சிஈபி (CEB) ஆக்கள் வந்து ஆஸ்பத்திரிக்குள்ள நிக்கிற பழைய மரங்களை வெட்டுறாங்கள். ஒருக்கா பாருங்கோ” என்று  கிளிநொச்சி வைத்தியசாலைக்குள்ளிருந்து ஒரு தொலைபேசித் தகவல் கிடைத்தது.

கிளிநொச்சியில் பிறந்து கிளிநொச்சியில் வளர்ந்து கிளிநொச்சியில் வாழ்ந்து வருவதனால் எனக்கு தகவல் மூலங்களுக்கு குறைச்சல் இல்லைத்தான். என்னோடு வளர்ந்து என்னோடு படித்து என்னோடு சேர்ந்து விளையாடிய பலர் இன்று பல துறைகளில் பணியாற்றுகிறார்கள். அப்படி அவர்கள் ஊடாக எனக்கு வந்து சேரும் தகவல்களில் பொது நலனுக்கு தேவையான தகவல்களை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறேன்.

ஆனால் அவை எவற்றையும் கருத்தில் எடுத்து தீர்வுகாணத் தவறும் அதிகாரத்தரப்பினர் காலத்திற்குக் காலம் எனக்கு தகவல் தருபவர்கள் யார் எவர் என்பதை இனங்காணவே அதிகம் முற்படுவதை பார்த்திருக்கிறேன்.

ஆதாரங்களுடன் சுகாதாரத்துறையினர் தொடர்பில் வெளிப்படுத்திய விடயங்களுக்கு எவரும் நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பது பேரவலம். அதனை அடியொற்றி சிஸ்டம் பிழைத்துவிட்டதாக நான் எழுதிய கட்டுரைக்கு ஒருமித்து எதிர்ப்பு எழுப்பினார்கள் மாவட்ட சுகாதாரத்துறையினர்.

இதனால் இனிமேல் சுகாதாரத்துறையில் சுட்டிக்காட்டப்படும் விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. அண்மைக்காலமாக சுகாதாரத்துறை தொடர்பாக நான் எதையும் தெரிவிக்காது ஒதுங்கியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இருப்பினும், இந்த மண்ணின் எதிர்கால சந்ததி குறித்த அக்கறையுடன் எழுதிவரும் எமக்கு எதிர்கால நோக்குகள் எதுவும் இல்லாது மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளைக் கண்டும் காணாமல் இருக்க முடிவதில்லை. அதனால் வந்த தகவலை மேற்கொண்டு ஆராய்ந்தபோது கிடைத்த விபரங்களை கட்டுரையாக்கி வாசகர்களுக்கு தருகிறேன்.

யாருக்கும் எதுவும் தெரியாது

என்னோடு தொடர்பில் உள்ள சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களில் பலர் எனது பள்ளித் தோழர்கள். இன்னும் பலர் பல தளங்களில் நான் ஊடாடியமையாலும் எனது ஊடக தொழிலாலும் தொடர்பு வட்டத்திற்குள் வந்தவர்கள்.

இவர்களில் எவருக்குமே அந்தப் புதிய கட்டிடம் தொடர்பில் தெளிவாக எந்தத் தகவலும் தெரியாது. “வீ.ஓ.ஜி சரவணன் டொக்ரர் தான் உந்த கட்டிடத்தை கட்டவேணும் எண்டு தொடங்கினவர்”, “முந்தின சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தார்தான் ஏதோ திட்டத்தில இதை கட்ட வெளிக்கிட்டவர்”, “வடக்கிற்கான மகளிர் பொது மருத்துவமனை எண்டு நினைக்கிறன்”, “கிளிநொச்சி பொறியியல் பீடத்தினர் தான் திட்டம் போட்டவை. அவயள கேட்டால் தெரியும்” என்று பல்வேறு ஊகங்களைத் தான் அவர்களால் தரமுடிந்தது

இறுதியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உள்ளதை அறிவோம் என்று கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிமனைக்குக் கோரிக்கையை அனுப்பி மூன்று மாதங்களுக்கு மேலாகியும் உரிய பதில் இன்னமும் கிடைக்கவில்லை.

முதலில் “மாகாண சுகாதாரப் பணிமனையைத்தான் கேட்கவேண்டும்” என்றார்கள். நான் “மேன்முறையீடு செய்யப்போகிறேன்” என்றதும், ‘கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உங்களது தகவல் அறியும் கோரிக்கையை அனுப்பி விபரம் கேட்டுள்ளோம்’ என்று சொல்கிறார்கள். ஆனால் இதுவரை எவ்வித பதிலும் இல்லை எனவே இப்போது  என்னால்  தகவல் அறியும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பம்

கிடைத்த சிறிய தகவல்களுடன் மேலும் ஆழமாகத் தேடத்தொடங்கினேன். முன்னாள் வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், கிளிநொச்சி பொறியியல் பீடத்தினர்  மற்றும் மருத்துவத்துறையினர் ஆகியோருடன் உரையாடி ஓரளவு தகவல்களைப் பெறமுடிந்தது. இந்த திட்டத்தினை இலங்கையில் செயற்படுத்தும் வாமெட் (VAMED) மற்றும் நிர்மானப்பணிகளை மேற்கொள்ளும் அக்சஸ் (Acess) ஆகியவற்றில் இருந்து மேலும் சில தகவல்களைப் பெற முடிந்தது.

அரசு புலிகள் சமாதானப் பேச்சுகள் நடந்த அதே காலப்பகுதியில், வடக்கில் மட்டுமல்லாது முழு நாட்டிலுமே நவீன வடிவத்தில் எதிர்கால நோக்குடன் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டவைதான் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பொது வைத்தியசாலைகள்.

அந்தச் செயற்திட்டங்கள் முற்றாக நிறைவடைவதற்கு முன்பாகவே சமாதானப் பேச்சுகள் குழம்பி யுத்தமேகம் சூழ்ந்ததை அடுத்து முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத இந்த வைத்தியசாலைகளை வைத்தே வைத்தியத்துறையினர் வன்னி மக்களுக்கு சேவைகளை வழங்க ஆரம்பித்தனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் இந்த இரண்டு வைத்தியசாலைகளினது மீள் அபிவிருத்தி குறித்து பலதடவைகள் பேசப்பட்டாலும் காரியம் இலகுவில் கைகூடிவரவில்லை.

இடைநடுவே முல்லைத்தீவு வைத்தியசாலையின் அமைவிடம் மற்றும் நிலப்பரப்பின் உரிமை தொடர்பில் ஏற்பட்ட குழப்பநிலையால் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் காரணமாக அவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி தற்காலிகமாகத் தடைப்பட்டுப் போனது.

இருப்பினும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான முயற்சிகள் 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு பல திட்ட முன்மொழிவுகள் (Project Proposals) வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சின் ஊடாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

மகளிருக்கான விசேட சிகிச்சை மையம்

இந்த நிலையில்  ‘வடக்கிலேயே மகளிருக்கான ஒரு விசேட சிகிச்சை மையத்தினை (Specialized centre for Women’s health in Northern Province) உருவாக்க வேண்டும்’ என்ற பரிந்துரை விசேட முன்மொழிவாக (Special Proposal) வைத்திய நிபுணர்கள் கொண்ட ஆலோசனைச் சபையினால் வடக்கு மாகாண சபைக்கு 2015/2016ம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது.

இக்குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தவரே மகப்பேற்றியல் நிபுணர் சரவணபவன். அவர் குறித்த பரிந்துரை மேற்கொண்ட காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இலங்கையில் அவ்வாறான விசேட மகளிர் சிகிச்சை மையங்களாக கொழும்பு டி சொய்ஸா மகளிர் மருத்துவமனை, கொழும்பு காசில் வீதி மகளிர் மருத்துவமனை, காலி மகளிர் மருத்துவமனை ஆகியன செயற்படுகின்றன.

இதன் காரணமாக வடக்கில் உள்ள கர்ப்பவதிகள் உள்ளிட்ட பெண்களுக்கு விசேட சிகிச்சைகள் தேவைப்படும்போது தென்பகுதிக்கு அனுப்பப்படும் நிலையே தற்போது காணப்படுகிறது.

அது தவிர, குழந்தைப் பேறு கிடைக்காதவர்களுக்கான கருவளவாக்கல் சிகிச்சையினைப் பெறுவதற்கு வடமாகாண மக்கள் பெரும் பொருட்செலவில் கொழும்பிற்கும் வெளிநாடுகளுக்கும் செல்லவேண்டி உள்ளது.

இதனால் வடமாகாண மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள், பொருளாதார நெருக்கீடுகள் மற்றும் வசதியீனங்களைக் கருத்தில் கொண்டு, அவை எல்லாவற்றிற்கும் நிரந்தரத் தீர்வாகவே துறைசார் வல்லுனர்களால் மேற்படி திட்ட முன்மொழிவு வடக்கு மாகாண சுகாதார அமைச்சிற்கு முன்வைக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட பரிந்துரைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு விரைந்து செயற்பட்டவர் அப்போதைய வடமாகாண சுகாதார அமைச்சர் Dr சத்தியலிங்கம். அவர் தனது விடாமுயற்சியால் மத்திய சுகாதார அமைச்சின் ஊடாக நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் வட மாகாணத்தில் நான்கு விசேட சிகிச்சை மையங்களை நிர்மாணிக்கும் பாரிய செயற்திட்டத்தினை கொண்டுவந்தார்.

கிளிநொச்சியில் மாகாணத்திற்கான விசேட மகளிர் சிகிச்சை மையம், வவுனியாவில் மாகாணத்திற்கான இதய மற்றும் சிறுநீரக சிகிச்சை மையம் மற்றும் மாங்குளத்தில் தண்டுவடம் பாதிப்புற்ற மற்றும் விசேட தேவையுடயவர்ளுக்கு சேவை வழங்குவதற்கான விசேட புனருத்தாரண மையம் (Special Rehabilitation Centre for Northern Province) ஆகியவற்றுடன் வடக்கில் உளவளத்தினை மேம்படுத்தும் திட்டமும் அதில் அடங்கியிருந்தது.

நெதர்லாந்து குழுவினரின் வாக்குறுதி

இத்திட்டத்தின் ஆரம்ப காலப்பகுதியான 2016/2017ம் ஆண்டுகளில் இந்த விசேட மகளிர் சிகிச்சை மையத்தினை அமைப்பது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடலுக்கு நெதர்லாந்து அரசின் பிரதிநிதிகள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வந்திருந்தார்கள்.

அவ்வேளையில் நெதர்லாந்து உட்பட்ட பன்னாட்டு நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு யுத்த சூழலால் இடைநடுவில் தடைபட்டுப்போன கிளிநொச்சி வைத்திசாலையின் இரண்டாம் கட்டத்தினை நிறைவு செய்ய வேண்டியதற்கான தேவை குறித்து  மாவட்ட மற்றும் வைத்தியசாலைச் சுகாதாரத் தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.

மிகுந்த அக்கறையுடன் அதுகுறித்து கேட்டறிந்த நெதர்லாந்து குழுவினர், தம்மால் அமைத்துத் தரப்படவுள்ள விசேட மகளிர் சிகிச்சை மையத்துடன் இணைந்ததாக, மருத்துவமனையின் இரண்டாம் கட்டத்தில் அமைக்கப்படவேண்டியுள்ள பிரதான பிரிவுகளில் ஏதாவது ஒன்றினையும் அமைத்துத் தருவதாகக் உறுதியளித்தனர்.

A9 பிரதான மார்க்கத்தில் உள்ள வடக்கின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசர விபத்துச் சிகிச்சைப்பிரிவிற்கான முறையான வசதிகளுடன் கூடிய கட்டடம் ஒன்று அதுவரை அமைக்கப்பட்டிருக்கவில்லை.

இதனால் இரண்டாம் கட்ட வைத்தியசாலை அபிவிருத்தியில் அவசர மற்றும் விபத்துச் சேவைப் பிரிவிற்கு முன்னுரிமை வழங்குவது எனவும் அதனை விசேட மகளிர் சிகிச்சை மையத்தின் தரைத்தளத்தில் அமைப்பது என்றும் அப்போது அவ்விடயத்தில் சம்பந்தப்பட்டிருந்த சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விசேட மகளிர் சிகிச்சை மையத்தின் தரைத்தளத்தில் சிரி ஸ்கானருடன் கூடிய அவசர மற்றும் விபத்து சேவைப் பிரிவினை (Accident and Emergency Unit with CT scan facilities) அமைப்பது என்றும் அது கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கும், விசேட மகப்பேற்று அலகிற்கும் பொதுவானதாக இருக்கும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.

இதன்மூலம் ஆளணிகள் உள்ளிட்ட வளங்கள் பரவலாக்கப்படமால் ஒருங்கிணைக்கப்படும் (pooling of  avilable resources) எனவும் கிளிநொச்சி வைத்திசாலையின் தனித்துவமான ‘வெளி நடைபாதைகள் அற்ற வைத்தியசாலை (Unique hospital without covered way)’ வடிவம் பேணப்படும் எனவும் மேற்குறித்த ஆலோசனை நியாயப்படுத்தப்பட்டிருந்தது.

அதற்குப் பொருத்தமாக  கிளிநொச்சி வைத்தியசாலையின் தற்போதைய கட்டடத் தொகுதியுடன் இணைந்தவாறு (தற்போதைய அவசர சிகிச்சைப் பிரிவிற்கு முன்பாக) நெதர்லாந்து அரசினால் அமைக்கப்படப்போகும் கட்டடத்தொகுதியினைக் கட்டுவதே சிறந்தது என முன்மொழியப்பட்டது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்