வடமாகாண எல்லைகளை மூடுங்கள்!

வடமாகாண எல்லைகள் அனைத்தும் மூடச்செய்யப்பட்டு உள்வருவோரும் வெளிச்செல்வோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்’ அப்படிசெய்தால் நாம் பாதுகாக்கபடலாம் இல்லாவிடில் நாம் பேரழிவை சந்திக்கவேண்டிவரும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து கருத்துதெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகுந்த பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் குறித்த தாக்கத்திற்குள்ளாகியதாக எவரும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அவ்வாறனவர்களை இனம் காண்பதற்கான வசதிகள் இங்கு உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.

குறிப்பாக அதிகமானோர் பாதிக்கபட்பட்டால் அவர்களை பராமரிக்ககூடிய அதிதீவிர பிரிவின் கட்டில்கள் வடக்கில் உள்ளதா என்று பார்க்க வேண்டும். வடக்கில் யாழ் வைத்தியசாலையில் 13 கட்டில்களும் வவுனியா வைத்தியசாலையில் 4 கட்டில்களும் முல்லைதீவு 2 கிளிநொச்சியில் 3 என மொத்தம் 22 கட்டில்களே இங்கு இருக்கின்றன.

அவையும் பாவனையில் உள்ளன. இப்படியான சூழலில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் எப்படி மக்களை காப்பாற்ற போகின்றோம் என்பது இங்கு பாரிய பிரச்சினை.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை இனம் காணக்கூடிய பி.சி.ஆர் என்ற இயந்திரம் வடக்கில் எங்கும் இல்லை. எனவே வவுனியா மற்றும் யாழ்வைத்தியசாலைகளிற்கு அந்த வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன் தற்போது அனைவரும் அணிந்துள்ள முககவசம் கூட தகுதியற்றது. அதனூடாக வைரஸ் இலகுவாக உட்செல்லும் வாய்புள்ளது. குறித்த வைரஸ் கண்ணின் ஊடாக கூட செல்லும் நிலை உள்ளது. எனவே ‘என்95’ என்ற முககவசமே தரமானது.

எனவே வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஊழியர்களிற்கு கூட அந்த கவசத்தை வழங்கும் நிலையில் இந்த அரசாங்கம் இல்லை. எனவே வைத்தியசாலை ஊழியர்களிற்கும் இது வழங்கப்படவேண்டும். இல்லாவிடில் அவர்களூடாகவே இது பரவக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இந்தவிடயத்தில் அரசு வெளிப்படை தன்மை இன்றியே செயற்பட்டுவருகின்றது.

விமானபயணிகள் வவுனியா பலாலி, கேப்பாபிலவு, இரணைமடு போன்ற விமானதளங்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். ஆனால் இது தொடர்பான தகவல்கள் எவையும் சுகாதார பிரிவினருக்கு வழங்கப்படவில்லை. சுகாதாரவைத்திய அதிகாரிகள் அவர்களை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நாம் படையினரின் செயற்பாடுகளை மதிக்கின்றோம். எனினும் இது வெளிப்படைத் தன்மையானதல்ல. எனவே மாகாணமட்டத்தில் ஒரு விசேடசெயலணி உருவாக்கபடவேண்டும். அதில் இராணுவத்தினரும் உள்வாங்கப்பட வேண்டும். அதில் தீர்மானம் எடுப்பவர்களாக சுகாதாரபிரிவினர் இருக்க வேண்டும். இராணுவ நகர்வுகள் மூலம் மாத்திரம் இதனை கட்டுப்படுத்தமுடியாது.

அத்துடன் பிரதேச தனிமைப்படுத்தல் முறை உருவாக்கபட வேண்டும். வடக்கில் தற்போது குறித்த தொற்று எவருக்கும் இல்லை. எனவே மக்களை சுதந்திரமாக வாழவிட்டு வடமாகாண எல்லைகள் அனைத்தும் இராணுவத்தை கொண்டு மூடச்செய்யப்பட்டு உள்வருவோரும் வெளிச்செல்வோரும் தீவிரமாக கண்காணிக்கபட வேண்டும். அப்படி செய்தால் நாம் பாதுகாக்கபடலாம் இல்லாவிடில் நாம் பேரழிவை சந்திக்க வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்