வடக்கில் தடுப்பூசி பெறாத ஒரு இலட்சம் பேர்

வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதமானவர்கள் முதலாம் கட்ட தடுப்பூசியையும் 62 சதவீதமானவர்கள் 2 ஆம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளதாக வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

எந்தவொரு தடுப்பூசி மருந்தையும் பெற்றுக்கொள்ளாதவர்களே வட மாகாணத்தில் அதிகளவில் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தையும் இறப்புக்களையும் குறைக்க முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதி முதல் வடமாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும்இ இறப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

வடமாகாணத்தில் இதுவரை 32 ஆயிரத்து 844 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 480 தொற்றாளர்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்திலும் 5 ஆயிரத்து 847 தொற்றாளர்கள் செப்டெம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

அத்துடன் வடமாகாணத்தில் 578 கொரோனா இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 228 இறப்புக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்திலும் 169 இறப்புக்கள் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்