வடக்கில் சித்தமருத்துவத்துறையை மேம்படுத்த நடவடிக்கை!

வடக்கில் சித்தமருத்துவ துறையை மேலும் வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

புதிதாகக் கட்டப்பட்ட பள்ளமடு கிராமிய சித்த மருத்துவமனையினை வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் ரீதியாகத் திறந்து வைத்து உரையாற்றிய அவர்,

அரச சேவை நிலையங்கள் மக்களுடைய தேவையை அறிந்து தமது சேவைகளை மக்களின் கால்தடத்திற்கே கொண்டுசெல்ல வேண்டும் என்றும், கட்டடங்களை கட்டி முடிப்பதோடு மட்டும் எமது வேலை முடியவில்லை என்றும், அந்தக் கட்டடங்களைச் சார்ந்த ஊழியர்கள் உரிய சேவைகளை மக்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உணவே மருந்து என்று சொல்லுவார்கள். அதன்படி நமது உடலிற்குத் தேவையான ஏதோவொன்று அதிகாமாகும்போது நாம் நோய்வாய்ப்படுகின்றோம் எனத் தெரிவித்த அவர், உதாரணமாக, இனிப்பு அதிகமானால் அதனை நீரிழிவு நோய் என்றும்;, உப்பு அதிகமானால் அதை இரத்த அழுத்தம் என்றும், கொழுப்பு அதிகமானால் அதை கொலஸ்ரோல் என்றும் சொல்கிறார்கள் என்றார்.

உணவை அடிப்படையைக்கொண்டு நோய்களைக் குணமாக்குவதற்கான செயற்பாட்டினை கொண்டிருக்கின்ற சித்த வைத்திய முறையில் தற்போது மேல் நாட்டவர்கள் உட்பட அனைவருமே நம்பிக்கை ஏற்பட்டுள்ள நிலையில் இங்குள்ள மக்களும் அதைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காகவே சித்த வைத்தியத் துறையை வளர்க்க வேண்டுமென்ற சிந்தனை தேசிய மட்டத்தில் காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக வட மாகாண சபை அதில் ஆர்வமுடன் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியாகவுள்ளதென தெரிவித்த அவர், பொதுவாக நமது நாட்டில் அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்கின்றதொரு நடைமுறை இருக்கின்றது. அதனால் ஒரு நோயின் முக்கிய காரணங்களை சோதனை செய்யாமல் மருத்துவம் செய்யும் போக்கே அதிகமாக காணப்படுகின்றது. அதனால் மேலதிக நோய்களை ஒரு நோயாளி பெற்றுக்கொள்ளும் நிலையானது பல சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்றதெனவும் தெரிவித்தார்.

எனவே, நோயின் தன்மைகளையும் அதற்குரிய மருந்தையும் உணவுப் பழக்கத்தையும் சரியாக சொல்லுகின்ற ஒரு வைத்திய முறைதான் இந்த சித்த வைத்திய முறையென தெரிவித்த அவர், இவற்றைப்பற்றிய சரியான புரிதலை மக்களுக்கு கொண்டுசெல்ல வைத்தியர்கள் முயற்சி எடுக்கவேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறைக்கு இம்மருத்துவமுறையில் நம்பிக்கை ஏற்படும் என்றார்.

முகநூலில் நாம்