வடக்கில் அதிகரித்த போதை பொருள் பாவனை திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது- சந்திரகுமார்.

 வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த நிலைமை என்பது ஒரு
திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு,எமது
சமூக வீழ்ச்சியே முக்கிய காரணமாக காணப்படுகிறது. சமூக வீழ்ச்சிக்குப்
பிரதான காரணம், சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமையே. சரியான அரசியற்
தலைமைத்துவத்தின் வழிகாட்டல் இல்லாத சமூகங்களின் நிலைமை
இப்படித்தானிருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக்
கட்சியின் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பில் கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவர் மேலும்
தெரிவிக்கையில்

இயற்கை வளத்தைச் சிதைக்கும் சட்ட விரோத மணல் அகழ்வு, காடழிப்பு,
சட்டவிரோத மது உற்பத்தி (கசிப்புக் காய்ச்சுதல்) போன்றவற்றில்
ஈடுபடுவோரில் அதிகமானோர் சில அரசியற் கட்சிகளின் ஆட்களாக  – ஆதரவாளர்களாக
– உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் இவர்களால் எப்படி மக்களுக்குச்
சரியான வழிகாட்டுதலைச் செய்ய முடியும்? இப்படியே காணி அபகரிப்பு. ஊழல்
முறைகேடுகள், நிர்வாகச் சீரழிவுகள் என எமது சமூகத்தைப் பாழ்படுத்திக்
கொண்டிருக்கின்றன.

போதாக்குறைக்கு போதைப் பொருள் பாவனை – விற்பனையின் அதிகரிப்பும்
தலைதூக்கியுள்ளது.  என்றுமில்லாத அளவுக்கு வடக்கில் போதைப்பொருள் பாவனை
அதிககரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய தரப்பினர்கள் இதற்கு
ஒத்துழைப்பு வழங்குவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதுவொரு
திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலா என்ற சந்தேகமும் பொது மக்கள் மத்தியில்
வலுவாக காணப்படுகிறது.

 இதைக்குறித்து ஊடகங்கள், சமூக மட்ட அமைப்புகள், அரசியற் தலைமைகள்,
பொலிஸ் மற்றும் சட்டத் தரப்புகள் ஒருங்கிணைந்து செயற்பட்ட நடவடிக்கையை
மேற்கொள்ள வேண்டும். இது மிகமிக அவசியமானது. பாடசாலை மாணவர்கள் தொடக்கம்
25 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையே இதில் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உடல், உள ரீதியாக இவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சிலர் வன்முறைகளிலும்
திருட்டிலும் ஈடுபடுகின்றனர். இளைய தலைமுறை பாதிக்கப்பட்டால் எதிர்காலச்
சமூகமே பாதிப்புக்குள்ளாகும்.

இன விடுதலை, தேச விடுதலையைப் பற்றிப் பேசுகிறோம். அதற்கு ஆதாரமானவர்கள்
எங்கள் இளைய தலைமுறையினர். ஆகவே நிலத்தைப் பாதுகாப்பதைப்போல, எமது
மொழியை, பண்பாட்டை, வளங்களைப் பாதுகாப்பதைப்போல எமது இளைய தலைமுறையையும்
நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களே எமது ஆகச்சிறந்த வளமாகும்.

 ஆகவே இதைக்குறித்து நாம் மிகக் கரிசனை கொண்டு செயற்பட வேண்டும். எமது
தரப்பிலிருந்து நாங்கள் விழிப்புணர்வு நடவடிக்கை, சட்டத்தரப்புகளுடன்
ஆலோசனை செய்து அதன் வழியாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள்,
மருத்துவத்துறை, உளவளத்துறை போன்ற தரப்புகளோடு தொடர்பு கொண்டு அவர்கள்
மூலமான பாதுகாப்பு நடவடிக்கை எனப் பல வழிகளிலும் செயற்படவேண்டும். எனவும்
அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்