

தற்போது வெற்றிடமாக உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
பதவிக்கு மருத்துவ நிர்வாகத்துறை விசேட வைத்திய நிபுணர் திலிப் லியனகே
(Dr. Dilip H Liyanage) சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட மருத்துவ
நிர்வாக சேவை அதிகாரியான வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் வருடாந்த
இடமாற்றத்திற்கு அமைய யாழப்பாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக இந்த வருட
ஆரம்பத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதிலிருந்து குறித்த பதவி வெற்றிடமாகியதுடன், வைத்திய கலாநிதி கேதீஸ்வரனே
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் பதில் கடமையாற்றி வருகிறார். இவர்
சுகாதார அமைச்சிற்கு விடுத்த தொடர்ச்சியான வேண்டுகோள்களை அடுத்தும்
வடமாகாண ஆளுனர் உட்பட பல மட்டங்களில் சுகாதார அமைச்சிற்கு
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாகவும் சேவையின் தேவை கருதி இப்
புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கின் புதிய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தமது வைத்தியப் பணிகளை
மன்னார் மாவட்ட மார்பு நோய் வைத்தியநிலைய பொறுப்பதிகாரியாக (DTCO)
ஆரம்பித்தவர் என்பதும் 2017ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில்
பன்றிக்காய்ச்சல் நோய் தீவிரமாகப் பரவிய காலப்பகுதியில் மாவட்டப் பொது
வைத்தியசாலையின் பணிப்பாளராக வளங்களை ஒருங்கிணைத்து மக்கள் உயிரிழப்பதைத்
தடுக்க மருத்துவ ஆளணியினருக்கு உதவிப் பலரது பாராட்டையும் பெற்றவர்
என்பதும் கவனிக்கத்தக்கதாகும.
மருத்துவ நிர்வாகத்துறையில் விசேட வைத்திய நிபுணரான டிலிப் லியனனே
மார்புநோய் சிகிச்சை டிப்புளோமா, சர்வதேச உறவுகளுக்கான பட்டமேற்படிப்பு
டிப்புளோமா, உயர்தேசிய பொது பெறுகைகள் மற்றும் ஒப்பந்தமுகாமை டிப்ளோமா,
வணிக முகாமைத்துவ முதுகலைமாணி, மருத்துவ நிர்வாக முதுகலை மாணி மற்றும்
மருத்துவ நிர்வாக கலாநிதி ஆகிய பட்டமேற்படிப்புகளை நிறைவு செய்துள்ளதுடன்
மருத்துவ நிர்வாகத்துறையில் சிறப்புப் பயிற்சியினை இங்கிலாந்தில்
பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.