றினோன் இளைஞர் அணியை வெற்றி கொண்ட மொரகஸ் முல்லை இளைஞர் அணி அரையிறுதிக்கு தகுதி

சிட்டி புட்போல் லீக்கினால் நடத்தப்பட்டுவரும் 19 வயதுக்குட்பட்ட சிட்டி லீக் – எக்ஸ்போலங்கா யூத் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் றினோன் இளையோர் அணியை 4 – 3 என்ற பெனல்டி முறையில் வெற்றிகொண்ட மொரகஸ்முல்லை இளையோர் அணி, இரண்டாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த போட்டியில் வெற்றி அணியைத் தீரமானிப்பதற்காக அமுல்படுத்தப்பட்ட பெனல்டி முறையில் தீர்மானம் மிக்க கடைசி பெனல்டியை மொரகஸ்முல்லை இளையோர் அணி கோல் காப்பாளர் எம்.என். சிகார, இடப்புறமாகத் தாவி தடுத்ததன் மூலம் அவரது அணி அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மொரகஸ்முல்லை இளையோர் அணியின் ஆதிக்கம் சற்று மேலோங்கியிருந்தது.

மொரகஸ்முல்லை முன்கள வீரர்கள் றினோன் கோல் எல்லையை பல தடவைகள் ஆக்கிரமித்த போதிலும் அதன் பின்கள வீரர்களும் கோல்காப்பாளர் ஷரீபும் அவற்றைத் தடுத்து றிறுத்தினர்.

போட்டியின் முதலாவது பகுதியில் மொரகஸ்முல்லை இளையோர் அணி எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த போதிலும் றினோன் இளையோர் அணி ஓரிரு சந்தர்பங்களிலேயே எதிரணியின் எல்லைக்குள் ஊடுருவுவதை அவதானிக்க முடிந்தது.

மொரகஸ்முல்லை இளையோர் அணியின் இரு பக்க முன்கள வீரர்கள் மைதான எல்லைக்கோட்டை அண்மித்தவாறு விளையாடியமை அவ்வணிக்கு சாதமாக அமைந்தது.

ஆனால், றினோன் இளையோர் அணியின் இரு பக்க முன்கள வீரர்கள் எல்லைக் கோட்டை விட்டு உட்புறமாக விளையாடியது அவ்வணிக்கு பாதகமாக அமைந்தது.

போட்டி முடிவடைய சுமார் 10 நிமிடங்கள் இருந்தபோது இரண்டு அணிகளுக்கும் கோல் போடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்த போதிலும் முன்கள வீரர்கள் அவற்றைப் பயன்படுத்த தவறினர். அதேவேளை இரண்டு அணிகளினதும் கோல் காப்பாளர்களும் சாமர்த்தியமாக செயற்பட்டு கோல்களைத் தடுத்தவண்ணம் இருந்தனர்.

போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த பின்னர் வழங்கப்பட்ட பெனல்டிகளில் 2ஆவது பெனல்டிகளை இரண்டு அணிகளும் தவறவிட்டன. கடைசி பெனல்டியை மொரகஸ்முல்லை கோல்காப்பாளர் தடுத்து நிறுத்தி தனது அணியை அரை இறுதிக்கு இட்டுச்சென்றார்.

றினோன் இளையோர் அணி சார்பாக எஸ்.எம். பசூல், எம். அஸாம், எப். பஸலுல்லா ஆகியோர் பெனல்டிகளை கோலினுள் புகுத்தினர்.

இஸட். உமர் பெனல்டியை தவறவிட்டதுடன், எச்.எச். ஷஹிலின் பெனல்டியை சிகார தடுத்து நிறுத்தினார்.

மொரகஸ்முல்லை இளையோர் அணி சார்பாக பனிசல நமிதார, சத்சர பெரேரா, நவோத் லக்ஷித்த, டி. ஆதித்த ஆகியோர் பெனல்டிகளை கோலினுள் புகுத்தினர். ஆனால் ரவிந்த லக்ஷாமின் பெனல்டியை றினோள் கோல்காப்பாளர் ஷரிப் தடுத்து நிறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்