
ரஷ்யாவில் எரிமலையொன்றின் உச்சியை நோக்கி ஏறிக்கொண்டிருந்த 8 பேர் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். கிலுசெவ்ஸ்கயா சோப்கா எனும் எரிமலையில் கடந்தவாரம் இச்சம்பவம் இம்பெற்றுள்ளது.
ரஷ்யாவின் கம்செட்கா தீபகற்றத்தில் 160 இற்கும் அதிகமான எரிமலைகள் உள்ளன. அவற்றில் மிக உயரமான எரிமலை கிலுசெவ்ஸ்கயா. இந்த உயரம் 4754 மீற்றர் (15,597 அடிகள்) ஆகும். ஆசிய, ஐரோப்பிய நிலப்பரப்பில் செயற்படும் நிலையிலுள்ள மிக உயரமான எரிமலையும் இதுவாகும்.
1697 ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்தமை முதல் தடவையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதும் இந்த எரிமலை அடிக்கடி வெடிப்பது வழக்கம்.
இந்நிலையில், கடந்த வாரம் 12 பேர் கொண்ட ஒரு குழுவினர் இந்த எரிமலையின் உச்சியை நோக்கி ஈடுபட்டிருந்ததனர். 2 வழிகாட்டிகளும் இவர்களில் அடங்கியிருந்தனர்.
இவர்களில் ஒரு குழுவினர் சுமார் 13,000 அடி உயரத்தில் ஏறிகொண்டிருந்தபோது சறுக்கி வீழ்ந்ததால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
எரிமலையின் உச்சியிலிருந்து 1,600 அடி கீழே இச்சம்பவம் இம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குளிர் மிகுந்த கடுமையான காற்று காரணமாக மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்புக் குழுவின் ஹெலிகொப்டர் ஒன்றை தரையிறக்குவதற்கு இரு தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மலையானது எரிமலை பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளினால் ஆனவை. இம்மலையின் உயரமும், எரிமலை வெடிப்பும் அபாயமும் இதில் ஏறும் மலையேறிகளுக்கு ஆபத்தானவை என அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.