ரஞ்சி டிராபி: கர்நாடகாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெங்கால்

ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கின. கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் – கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது.   மஜும்தார் (ஆட்டமிழக்காமல் 149 ரன்) அபாரமாக விளையாடி சதம் அடிக்க பெங்கால் முதல் இன்னிங்சில்  312 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. கர்நாடகா அணி சார்பில் மிதுன், மோர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா மற்றும் கவுதம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சை தொடங்கியது. பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் இஷான் பொரேல் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் கர்நாடகா 122 ரன்னில் சுருண்டது. பொரேல் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 190 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் 2-வது இன்னிங்சை தொடங்கியது. கர்நாடகா பந்து வீச்சாளர்கள் நேர்த்தியான வகையில் பந்து வீச பெங்கால் 161 ரன்களில் சுருண்டது. கர்நாடகா அணி சார்பில் மிதுன் நான்கு விக்கெட்டும், கவுதம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பெங்கால் ஒட்டுமொத்தமாக 351 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் கர்நாடகா அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா களம் இறங்கியது. கேஎல் ராகுல், சமர்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். சமர்த் 27 ரன்னில் வெளியேறினார். கேப்டன் கருண் நாயர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

4-வது விக்கெட்டுக்கு படிக்கல் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். படிக்கல் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

நேற்றைய ஆட்ட முடிவில் கர்நாடகா 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. படிக்கல் 50 ரன்னுடனும், மணிஷ் பாண்டே 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கர்நாடகா அணிக்கு கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருந்த நிலையில் வெற்றிக்கு மேலும் 254 ரன்கள் தேவைப்பட்டது.

இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. தேவ்தத் 52 ரன்கள் எடுத்த நிலையிலும், மணிஷ் பாண்டே மேலும் ஒரு ரன் சேர்த்து 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கர்நாடகா விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆரம்பித்தன. மிதுன் 38 ரன்களும், கவுதம் 22 ரன்களும் அடிக்க 177 ரன்னில் சுருண்டது.

இதனால் பெங்கால் 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்கால் பந்து வீச்சாளர் முகேஷ் குமார் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்கால் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

முகநூலில் நாம்