
ராஜ்கோட்டில் தொடங்கிய ரஞ்சிக் கோப்பை ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணிக்கெதிராக தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 424 ரன்கள் குவித்துள்ளது.
ரஞ்சி கோப்பையின் கடைசி சுற்று போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கிய ஆட்டத்தில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா அணிகள் மோதின.
டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் சிறப்பான தொடக்கம் தந்தார். ஆனால் அவருக்கு யாரும் ஒத்துழைப்பு தரவில்லை.
அரை சதம் கடந்த அபினவ் முகுந்த் 86 ரன்னில் அவுட்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதி கட்டத்தில் ஆடிய மொகமது 42 ரன்னில் வெளியேறினார்.
விக்கெட் கீப்பர் ஜெகதீசன் தனி ஆளாக நின்று தமிழக அணிக்கு ரன்கள் சேர்த்தார். சதமடித்த அவர் அபாரமாக ஆடினார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 183 ரன்னில் ஆட்டமிழந்தார். அத்துடன் தமிழக அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இறுதியில், தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்சில் 424 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
சவுராஷ்டிரா அணி சார்பில் ஜெய்தேவ் உனத்கட் 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, சவுராஷ்டிரா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.