ரஜினியை கேலி செய்த இந்தி நடிகருக்கு எதிர்ப்பு

இந்தியில் காபில், ஏக் கிலாடி ஏக் ஹஸீனா, அபார்ட்மெண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரோகித் ராய். தேஸ் மெய்ன் நிகிலா ஹோகாந்த், ஸ்வபிமான் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு ரோகித் ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா பற்றிய பதிவை வெளியிட்டு இருந்தார்.

அதில் ரஜினிகாந்த் பெயரை இணைத்து கேலி செய்வதுபோன்ற வாசகம் உள்ள படமும் இடம்பெற்று இருந்தது. மேலும் அந்த படத்துடன், “கொரோனாவை அடக்குவோம். வேலைக்கு கவனமாக செல்லுங்கள், முக கவசம் அணியுங்கள். தினமும் பலமுறை கை கழுவுங்கள், நாம் அனுமதிக்காமல் கொரோனா வைரஸ் நம்மை தொற்றாது” என்றெல்லாம் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சர்ச்சையானது.

ரஜினிகாந்தை கேலி செய்து இருப்பதாக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ரோகித் ராயை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கடுமையாக கண்டித்தனர். கொரோனா விழிப்புணர்வுக்கு ரஜினியை கேலி செய்வது ஏற்புடையது அல்ல என்றும் விமர்சித்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள ரோகித் ராய் “நண்பர்கள் அமைதி காக்க வேண்டும்.

இது ஒரு நகைச்சுவைதான். சிரிக்க வைப்பதற்காகவே இப்படி செய்தேன். நான் பதிவிட்ட கருத்தை எதிர்மறையாக எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கவில்லை. விமர்சிப்பதற்கு முன்னால் எதற்காக அதை பகிர்ந்தேன் என்பதை உணருங்கள். ரஜினிக்கு இணையாக யாரும் இல்லை,” என்று கூறியுள்ளார்.

முகநூலில் நாம்