யாழ். நகர் முழுவதும் அலைமோதும் மக்கள் கூட்டம்! பொது மக்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்

தொடர்ச்சியாக அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக இன்று காலை நீக்கப்பட்டதனையடுத்து யாழ். நகர் மற்றும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பொது மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவுவதன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தினை அமுல் படுத்தியிருந்தது.

எனினும் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இன்று காலை ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டது. இந்த நிலையிலேயே பொது மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம் காணப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசாங்கம் விசேட அறிவித்தலை விடுத்திருந்தது. இன்று காலை ஆறு மணியிலிருந்து மதியம் பன்னிரெண்டு மணி வரை ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் என்றும், மீண்டும் மதியம் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனால் பொது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் முண்டியத்துக் கொண்டனர். ஆனால் ஊரடங்குச் சட்டம் இரண்டு மணிவரை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதனால் எவரும் அச்சம் கொள்ளாமல் பொருட்களை நிதானமாக கொள்வனவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

எவ்வாறாயினும் இன்று மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் அன்று மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்