“யாருடைய எலிகள் நாம்?”

–         கருணாகரன்

“திக்கற்ற பார்வதி” என்றொரு திரைப்படம் 1970 களின் முற்பகுதியில் வந்திருந்தது. இன்றைய இலங்கையின் நிலையும் ஏறக்குறைய அந்தத் திக்கற்ற பார்வதியின் நிலையைப் போன்றதுதான்.

அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என்று ஒரே குழப்பத்துக்குள்ளாகியுள்ளது நாடு. இதற்குள் வெளி அழுத்தங்கள் வேறு. சீனக்கப்பலை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று இந்திய அழுத்தம். இந்த விடயத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்கத் தரப்பு. கடன் மறுசீரமைப்புத் தொடக்கம் எதிர்கால பொருளாதார, அரசியல் உறவு வரை எப்படி அமையும் என்பதை இந்தக் கப்பலைக் கையாள்வதைப் பொறுத்தே தீர்மானிக்க முடியும் என்று சொல்லும் சீனா.

இப்படி பல பக்கங்களாலும் ஒரே நேரத்தில் இடிபட்டுக்கொண்டிருக்கிறது இலங்கை. இது எப்படியிருக்கிறது என்றால்…

“ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக, அடிமை சாக
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்து வரச், சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டுக்
குருக்கள் வந்து தட்சணை கொடு
என்றாரே!”

–         என்பதைப் போல.

இந்த நிலையை எப்படி எதிர்கொள்வது என்று எவருக்குமே தெரியவில்லை. ஆனால், ரணில் விக்கிரமசிங்கதான் இப்பொழுது ஒரேயொரு மீட்பராகவும் காப்பராகவும் உள்ளார். விரும்பியோ விரும்பாமலோ அவரை நம்பித்தான் தஞ்சமடைந்திருக்கின்றனர் அனைவரும். அதாவது அவரை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் என அனைவரும்.

ஆனால், படு குழியிலிருக்கும் இலங்கையை ரணில் விக்கிரமசிங்க என்ற ஒன்றை மனிதரால் விரைவில் மீட்டெடுக்க முடியுமா? என்னதான் அதிகாரமுடைய ஜனாதிபதியாக அவர் இருந்தாலும் அவருக்கும் வரையறைகள் – எல்லைகள் உண்டல்லவா. அவரொன்றும் மாயாவி அல்லவே!

அப்படித்தான் அவர் ஒரு சாகஸ நாயகமாக மாறினாலும் அதற்கு உள்நாட்டிலும் வெளிச்சூழலிலும் சாதகமான நிலைமைகள் இருக்குமா? போதிய ஆதரவு கிட்டுமா?

அரசியலமைப்பின்படியும் கள யதார்த்தத்தின்படியும் இன்னும் பாராளுமன்றமே வலுவானதாக இருக்கிறது. ஜனாதிபதியைக் கூட அது ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்தலாம். என்றபடியால்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அவருக்கான ஆதரவையும் பாராளுமன்றமே – பெரும்பான்மையாக இருக்கும் பொதுஜன பெரமுனவே – வழங்குகிறது. நாளை இதே தரப்புகள் எதிர்க்கட்சிகளோடு இணைந்து ரணிலைச் சுற்றி வளைக்கவும் கூடும்.

ஆகவேதான் மிக அவசரமாக தன்னைப் பலப்படுத்துவதற்காக ரணில் சர்வகட்சி அரசாங்கத்தை – அனைத்துக் கட்சிகள் இணைந்த ஆட்சியை உருவாக்க முயற்சிக்கிறார்.

இது ரணில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வியூகம் என்று சொன்னாலும் இதைத் தவிர்த்து அவருக்கோ நமக்கோ வேறு வழியுமில்லை.

இப்படியான ஒரு நிலையில்தான் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வையும் காண வேண்டும் என்ற அவசர நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆனால், இதை எழுந்தமானமாக நினைத்த மாத்திரத்தில் நிறைவேற்றி விட முடியாது. மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாக இதைச் சுருக்கிக் கொண்டு எதையும் செய்யவும் முடியாது.

ஏனென்றால் இலங்கையின் பிரச்சினைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பானவை. ஒன்றின் விளைவாக ஒன்றென ஒவ்வொன்றாக உருவாகிப் பெருகியவை. ஒவ்வொன்றுக்குமான தீர்வை உரிய காலத்தில் உரிய முறையில் காணத்தவறியதன் விளைவே இன்றைய சீரழிந்த – அபாய நிலைமையாகும்.

ஆகவே இதைத் தீர்க்க வேண்டும் என்றால் அதற்குரிய அடிப்படைகளை நோக்கி துணிச்சலோடு ஜனாதிபதி நகர வேண்டும். அதாவது அதற்குரிய அடிப்படைகளில் செயற்பட வேண்டும். இந்தச் செயற்படு களத்தில் அனைத்துத் தரப்பும் இணைந்து கொள்வது அவசியம்.

ஆனால் அப்படிச் செயற்படுவதற்கான எந்த முஸ்தீபுகளையும் காண முடியவில்லை. பதிலாக குறுக்கு வழியில் இலக்கை எட்டிவிடலாம் என்ற தந்திரோபாயத்தையே பின்பற்றப் பார்க்கின்றது அதிகாரத் தரப்பு.

கடந்த காலங்களிலும் இப்படித்தான் நடந்தது. 

குறுக்கு வழியில் உடனடித்தீர்வைக் காண்பதையே  வழிமுறையாகக் கொண்டு பழகிய இலங்கையின் அதிகாரத் தரப்புக்கு அடிப்படைப் பிரச்சினையை இனங்கண்டு, அதைத்தீர்க்கும் எண்ணம் இருந்ததில்லை. உதாரணமாக இனப்பிரச்சினையின் விளைவாக உருவாகிய போரை முடித்து விட்டால் எல்லாமே சரியாகும் என்று எண்ணியதைப்போன்றதே இதுவும்.

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது உண்மைதான். ஆனால் அதன் தொடக்கப் புள்ளியான இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இப்பொழுது அது வேறு பல வடிவங்களில் பெருத்திருக்கிறது. காணாமல் போனார் விவகாரமாக, படைத்துறைச் செலவீனமாக, போர்க்குற்றமாக, அரசியலமைப்புத்திருத்தப் பிரச்சினையாக… பொருளாதார நெருக்கடியாக…. இப்படிப் பலவாக.

இதைப்போன்றதே நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு – பற்றாக்குறைக்கு – வரவு செலவுத்திட்டத்தில் விழுகின்ற துண்டு விழும் தொகைக்கு – குறைநிரப்புப் பிரேரணை மூலம் கடன் வாங்கிச்செலவு செய்து அப்போதைய நிலைமையை ஒவ்வொரு தரப்பும் சமாளித்தது.

அதாவது கடன் வாங்கி நிலைமையைச் சமாளித்ததாகும்.  அதிலும் முக்கியமாக முதற் பட்ட கடனுக்கு வட்டி கட்டுவதற்காக பிறகும் பிறகும் கடன் வாங்கிச் சமாளித்த திருக்கூத்தெல்லாம் நடந்தது.

இதைப்பற்றி பலருக்கும் தெரியும். ஆனால் இது ஒரு நாளைக்கு வெடிக்கும். படு சீரியஸான நிலைக்குப் போகும் என்று எந்த விண்ணரும் கற்பனை கூடச் செய்யவில்லை.

இப்பொழுது எல்லாமே வந்து இறுகி விட்டன. இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அதுதான் IMF என்ற அபயக் கடவுள் என்கின்றனர் நண்பர்கள்.

ஆம், இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்றால் IMF விடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்று பல்வேறு தரப்பினராலும் சொல்லப்படுகிறது.

அரசாங்கமும் இதே வழியில்தான் தீவிரமாகப் பயணிக்க முயற்சிக்கிறது. ஜனாதிபதி மட்டுமல்ல, சில அமைச்சர்களும் இதற்கான தீவிர பரப்புரைப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் சொல்கின்ற முதல் நியாயம், 199 அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன – இனி இயங்க முடியாத நிலைக்குள்ளாகி விட்டன என்பதாகும். இதைப்பற்றி தினமும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒப்புவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிறுவனங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததே இவர்கள்தானே!

தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அளவுக்கதிகமாக ஆள்நியமனங்களைச் செய்து திணித்தது, தமக்கிசைவான முறையில் நிர்வாகத்தை வளைத்து நெளித்தது, ஊழல்களைச் செய்தது, பொருத்தமில்லாத நடைமுறைகளை உருவாக்கியது போன்ற பொருத்தமற்ற காரியங்களைச் செய்து இந்த நிலைக்கு இவற்றைக் கொண்டு வந்து விட்டு இப்பொழுது நட்டத்தில் இருப்பதால் அவற்றை விற்போம் என்றால் சரியா?

நட்டமும் கடனும்தான் நாட்டின் விதியா?

இப்பொழுது இதிலிருந்து தப்ப வேண்டும் என்றால் ஒரேயொரு காத்தற்கடவுள்தான் உள்ளது. ஒரேயொரு மீட்பர்தான் உண்டு என்று IMF இடம் சரணாகதி அடையச் சொன்னால் இதை எப்படி ஏற்றுக் கொள்வது?

இல்லை, இந்தக் கட்டத்தில் வேறு எதுவுமே செய்ய முடியாது. நாங்கள் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்கும் க்யூவில் நிற்க முடியாது. அதை விட IMF விடம் போவது பரவாயில்லை என்றால்…

அதுவும் நல்லதுதான்.

ஏனென்றால் மக்களும் சரி, நாட்டின் தலைவர்களும் சரி கடன்பட்டு கடன்பட்டே (பிச்சையெடுத்து) பழகியவர்கள். அதனால் இப்போதும் அதற்கே எந்தத்த தயக்கமும் இன்றி முயற்சிக்கின்றனர். அதைத் திருப்பிச் செலுத்துவதைப் பற்றியோ, செலுத்தாத கடனுக்குப் பதிலாக என்ன நடக்கும் என்பதைப் பற்றியோ எந்தச் சிங்கனும் சிங்கியும் சிந்திக்கவேயில்லை.

ஆனால், எந்த விதமான முன் யோசனையும் இல்லாமல் IMF வரவேணும் என்று சொல்கிறார்கள்.

அன்பர்களே! IMF புகுந்த நாடுகள் எங்கேயாவது, ஏதாவது உருப்பட்டிருக்கிறது என்று எவராலும் சொல்ல முடியுமா? சிலர் சொல்கிறார்கள் “1991 இல் இந்தியா IMF விடம் சென்றதுதானே. அதற்குப் பிறகுதானே இந்தியப் பொருளாதாரம் விருத்தியடைந்தது என.

ஆனால் அதற்கு இந்தியா தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டே IMF விடம் சென்றது. எங்கள் நிலைமை?

அப்படித்தான் IMF வின் உதவிகளைப் பெறுவதாக இருந்தாலும் அந்தக் கடனுதவிகளை எப்படிப் பயன்படுத்துவது? அதன் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை – உற்பத்தியை எப்படிக் கட்டியெழுப்புவது? இதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு விட்டனா? அதற்கு – இதைச் சுயாதீனமாகத் திட்டமிடுவதற்கு – IMF அனுமதிக்குமா? ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதேனும் உண்டா? மத்திய வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் எண்ணமுண்டா? நாட்டை மீளமைப்பதற்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்கள் ஏதும் தயார்ப்படுத்தப்படுகிறதா?

இப்படி எதையும் செய்யாமல், எதைப்பற்றிய தெளிவும் இல்லாமல் அப்படியே IMF வின் நிபந்தனைகளுக்குட்பட்டுச் செயற்படுவது, அதன் காலடியில் விழுவது என்பது நாட்டை மிக மோசமான நிலைக்குக்கொண்டு செல்லும். இதைப்பற்றி யாருக்குமே தெரியாதா?

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை. ஜனநாயக மறுசீரமைப்பு வேண்டும் என்பது தொடக்கம் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுவாக்கம் – விற்க – வேண்டும் என்பது வரை பெரிய பில்டாவையெல்லாம் செய்து கொண்டிருக்கிறது IMF.

அதனுடைய குணமே இதுதான்.

எப்படியோ இதையெல்லாம் கடந்து IMF விடம் நாடு அடகு வைக்கப்படப் போகிறது. “சீனக் கடனுக்கும் IMF வின் கடனுக்குமிடையில் என்ன வேறுபாடுண்டு?” என்றொரு நண்பர் கேட்டதை இங்கே பதிவிடலாம்.

இரண்டுமே பொறிதான்.

குருக்கள் தவறு செய்தால் குற்றமில்லை என்பதைப்போல ரணில் தலைமையிலான அரசாங்கம் செய்தால் எதுவும் தப்பாக இருக்காது. அல்லது அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றே பலரும் கருதுகிறார்கள்.

இப்படித்தான் 1977 இல் திறந்த பொருளாதாரக் கொள்ளையை மன்னிக்கவும் கொள்கையை அப்போதைய UNP – ஜே. ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் கொண்டு வந்தபோது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

அது நாட்டுக்கு உண்டாக்கிய வீழ்ச்சியைத்தான்  இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

அதைப்போல ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய சகபாடிகளும் இப்பொழுது கொண்டு வரும் IMF வும் நாளைய இலங்கையை படு குழியில்தான் தள்ளும்.

இதைப்பற்றி உங்களுக்கு வேறேதானும் புரிதலும் அறிதலும் இருந்தால் சொல்லுங்கள் தோழர்களே!

ஆனாலும் நாம் விரும்பினால் என்ன விரும்பாது விட்டால் என்ன IMF வந்தே தீரும். அதற்கான பூர்வாங்க வேலைகள் எல்லாமே முடிந்து விட்டன.

இனிப் பெற்றோலில் நெருப்புப் பற்றியதைப்போல எல்லாமே கடகடவென்று நடக்கத் தொடங்கி விடும்.

இதற்குள் நம்முடைய தலைகளை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது? ஆம், “யாருடைய எலிகள் நாம்?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்