
கராப்பிட்டிய வைத்தியசாலையில் எட்டு மாத சிசுவொன்று பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, மெனிங்கோகோகல் பற்றீரியா சமூக பரவல் நிலையை அடையந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
காலி சிறைச்சாலையில் அண்மையில் இந்த பற்றீரியா முதலில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், மெனிங்கோகோகல் பற்றீரியா தொற்று போன்ற அறிகுறிகளுடன் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிசு ஒன்று சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், குறித்த சிசுவின் மரணம் காலி சிறைச்சாலைக்குள் பரவி வரும் மெனிங்கோகோகல் பற்றீரியா தொற்றினால் நிகழ்ந்ததா என சுகாதார அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், இந்த மரணம் மெனிங்கோகோகல் பற்றீரியாவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் அதேவேளையில், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் கோனார சோமரத்ன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், உடல் மாதிரிகள் மேலதிக விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன எனவும், தலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சிசுவே உயிரிழந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காய்ச்சல், சளி, சோர்வு, வாந்தி அல்லது குளிர்ந்த கைகள் மற்றும் கால்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மெனிங்கோகோகல் பற்றீரியாவால் இரண்டு கைதிகள் அண்மையில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த இரண்டு மரணங்களும் மெனிங்கோகோகல் பற்றீரியாவால் நேரடியாக ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.