முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் சி.ஐ.டி.யினர் விசாரணை!

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த,  ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி, ஜூட் ஷிரமந்த அன்டனி  ஜயமஹவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் போது, இலஞ்சமாக பணம் பறிமாற்றப்பட்டதா என சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

அதன்படி, இந்த விசாரணைகளில் ஒரு அங்கமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 3 மணி நேரம் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு விசாரணை செய்துள்ளது.

நேற்று  (18) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு சென்ற சிறப்புக் குழுவினர் இவ்வாறு அவரிடம் விசாரணைகளை நடாத்தி வாக்கு மூலம் பதிவு செய்துகொண்டதாக  சி.ஐ.டி.யின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில்  எழுந்துள்ள சர்ச்சையை மையப்படுத்தி கடந்த ஜூன் 23 ஆம் திகதி சி.ஐ.டி.யில்  முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இந்த முறைப்பாட்டை  தாக்கல் செய்திருந்தார்.

இதனைவிட இந்த விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்   முறைப்பாடொன்றினை அளித்திருந்தார்.

இவ்விரு முறைப்பாடுகளையும் மையபப்டுத்தி இந்த விசாரணைகள் சி.ஐ.டி.யினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30  ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 19 வயதுடைய  இவோன் ஜொன்சன்  எனும் யுவதியை அவர் அணிந்திருந்த காற்சட்டைக் கொண்டு கழுத்தை நெறித்தும், தலையை தரையில் அடித்து மண்டை ஓட்டினை 64 இடங்களில் சேதபப்டுத்தியும் கொடூரமாக கொலை செய்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ  கடந்த 2019 நவம்பர் 9 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார். 

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016 ஆம் அண்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே 2019 நவம்பர் 9 அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து முன்னாள் ஜனாதிபதி அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், குறித்த குற்றவாளியை விடுவிக்க தான் பணம் பெற்றதாக கூறப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மறுத்தார்.

எனினும் அவருக்கு மன்னிப்பளிக்க, அவரது குடும்பத்தாரை தன்னிடம் கூட்டி வந்து தொடர்ச்சியாக கோரிக்கை அளித்தவர் ரத்ன தேரர் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததுடன், குற்றவாளியின் குடும்பத்தினரிடமிருந்து பிரிதொரு தரப்பு பணம் பெற்றுள்ளதாகவும், தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்