முதல் ஒருநாள் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் சதம் – நியூசிலாந்துக்கு 348 ரன்கள் வெற்றி இலக்கு

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 347 ரன்கள் குவித்தது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.
இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற  நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சற்று அதிரடியாக ஆடினர். ஆனால் மிகப்பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. பிரித்வி ஷா 20 ரன்களிலும் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் விராட் கோலி ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி இணைந்தது. 

நிதானமாக ஆடிய கோலி அரைசதம் (51 ரன்கள்) கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கே.எல் ராகுல் களமிறங்கினார். ஒரு புறம் ஷ்ரேயஸ் ஐயர் நிதானமாக ஆட மறு முனையில் கே.எல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  


சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 107 பந்துகளில் 11 போர்கள் மற்றும் ஒரு சிக்சர் உள்பட 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொருபுறம் அதிரடியாக விளையாடிய ராகுல் 64 பந்துகளில்  6  சிக்சர்கள் மற்றும் 3 ஃபோர்கள் உள்பட 88 ரன்கள் குவித்தார்.


முடிவில், இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆட்டத்தை தொடர உள்ளது. 

முகநூலில் நாம்