முடிவுக்கு வருகின்றதா அரகலய?

–         கருணாகரன்

Go Home Gota அல்லது அரகலயவின் இன்றைய நிலை என்ன? இதனுடைய நாளைய பயணம் எப்படியாக இருக்கப்போகிறது? ஏனிந்தக் கேள்வி எழுகிறது என்றால், இந்தப் போராட்டத்தை ஆரம்பித்ததற்கான நோக்கம் அல்லது இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. அதாவது இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் பகிரங்கமாக முன்வைத்த அடிப்படையான விடயங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அதேவேளை இந்தப் போராட்டமானது, தற்போதைய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது. போராட்டத்தின் இயங்குவிசைகளாக இருந்த முக்கியச் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகின்றனர். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் தலைவரான வசந்த முதலிகமே உட்படச் சிலர் நீண்ட காலச் சிறைத் தடுப்புக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீது அவசரகாலச் சட்டத்திற்குட்பட்ட முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மட்டுமல்ல, இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அரச தரப்பினர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் கடந்த ஜூலை மாத முற்பகுதியில் இவர்கள் (அரச தரப்பினர்) எல்லாம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தனர். இப்பொழுது வெளியே வந்து குற்றம் சாட்டுகின்றனர் என்றால் அந்தளவுக்கு  நிலைமை மாறியுள்ளது. பலவீனப்பட்டிருந்த அரச தரப்புப் பலமடைந்து வருகிறது. பலமாக இருந்த போராட்டத்தரப்பு பலவீனப்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும்.

போராட்டத்தரப்பினர் மீது சுமத்தப்பட்டுள்ள முக்கியமான குற்றச்சாட்டுகள் –

1.    ஜனாதிபதி மாளிகை உள்பட அரச சொத்துகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளுக்கும் தீயிட்டது, சேதப்படுத்தியது.

2.     ஒரு கட்டத்தில் படையினரைத் தாக்கி, அவர்களுடைய ஆயுதத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.

3.    போராட்டக்காரர்களின் மையமாக இருந்த காலிமுகத்திடல் Go Home Gota குடியிருப்பில் கஞ்சாச் செடிகள் வளர்க்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தும் விதமாக பொலிசாரினால் வெளியிடப்பட்ட சில காட்சிகள்.

4.     போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர்  குடு மற்றும் போதைப் பொருட்பாவனையாளர்கள் .

5.    போராட்டக்காரர்களில் சிலருடைய வங்கிக் கணக்குகளுக்கு அதிகளவு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இது இவர்கள் பிற சக்திகளின் தூண்டலினால் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையை உறுதிப்படுத்துகிறது என்பது.

6.    போராட்டத்தரப்பினருடைய ஜனநாயக உரிமைகளை படைத்தரப்பும் அரசாங்கமும் மதித்த போதும் அதை மீறி, வன்முறைச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டனர் என்பது.

7.    மக்களைத் தவறான வழியில் பயன்படுத்தி (திசை திருப்பி) அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சியில் ஈடுபட்டனர்.

8.    ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சற் தடாகத்தில் சவர்க்காரம் போட்டுக் குளித்த காட்சியை பரப்பியதன் மூலமாக இலங்கையின் மரியாதையைக் கப்பலேற்றி விட்டனர். (இது குறித்து பாதுகாப்புச் செயலர் கமால் குணரட்ண அதிகளவு கவலைப்பட்டுள்ளார். ஆனால் வன்னியில் நடந்த இறுதிப்போரின் போதும் போர் முடிந்த பிறகும் நடந்த மனிதரப் பேரவல நிலையைக் குறித்து அவர் பெருமிதப்படுகிறார் போலும்).

இப்படி ஏராளம் குற்றச்சாட்டுகள்.

ஆக மொத்தத்தில் அரகலயவினர் (Go Home Gota) மீது அரச  தரப்பினர் முழுக்குற்றச் சாட்டையும் சுமத்தியுள்ளனர். இவ்வாறு குற்றச்சாட்டைச் சுமத்தியிருப்பதன் மூலம் போராட்டக்காரர்களைச் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை மக்களின் மனதில் நாசுக்காகப் பதிய வைக்கிறார்கள். அதோடு இந்தக் குற்றவாளிகள் மிக ஆபத்தானவர்கள். இவர்கள் மிக மோசமான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள். இவர்களுக்குப் பின்னணியில் பல தீய சக்திகள் இருக்கின்றன. அந்தச் சக்திகளின் பின்னணியில்தான் இவர்கள் இயங்குகின்றனர்.

ஆகவே இவர்களை நீங்கள் நம்பக் கூடாது. இவர்களுடைய கதைகளுக்கு எடுபடவோ இவர்களுக்கு ஆதரவளிக்கவோ கூடாது என்ற எச்சரிக்கை உணர்வையும் மக்களிடத்திலே ஏற்படுத்தி விடுகிறார்கள். அதிகாரத் தரப்புக்கு ஒரு சிறிய வாய்ப்புக் கிடைத்தால் போதும். அது தன்னை மிகக் கெட்டியாகப் பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சித்து விடும். அதேவேளை தன்னை எதிர்க்கும் தரப்பை அப்படியே சட்டங்களாலும் படை மற்றும் பொலிஸ், நீதி மன்றம், சட்டம் ஆகியவற்றின் மூலமாக ஒடுக்கி விடும். 

இப்பொழுது நடந்து கொண்டிருப்பது இதுதான். இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து Gota Go Home தரப்பினர் எப்படித் தம்மை விடுவித்துக் கொள்ளப்போகின்றனர்? அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகின்றனர்? இவர்கள் முன்னிறுத்திய கோரிக்கைகள் என்ன நிலைக்குள்ளாகப் போகின்றன? அந்தக் கோரிக்கைகளை மக்கள் முன்னெடுத்துச் செல்வார்களா? அந்தக் கோரிக்கைகளில் அரசு எவற்றை ஏற்றுக் கொள்ளும்? எந்த அளவுக்கு ஆட்சியில் மாற்றங்களைச் செய்யும்?  என்ற பல  கேள்விகள் எழுகின்றன.

இதேவேளை சமகாலத்தில் இவர்களுடைய போராட்டக்களமான காலி முகத்திடலையும் அரசாங்கம் மீளக் கைப்பற்றி, இவர்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டுள்ளது. அந்தப் பகுதி கொழும்பு மாநகர சபைக்குரியது என்பதால் அங்கே ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளுக்கான நட்ட ஈட்டையும் போராட்டத்தரப்பினர் அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவை எல்லாம் சட்டத்தை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும்.

ஆனால், உண்மையில் இது பகிரங்கமான அரசியற் பழிவாங்கலே.

எத்தகைய போராட்டத்தையும் அதிலுள்ள நியாயங்களைக் கவனித்து, அவற்றுக்குப் பரிகாரம் காண்பதற்கு முன்பு, அதிகாரத் தரப்பு சட்டத்தின் மூலமாகவே அதை அடக்க முற்படுவதுண்டு. அதற்கேற்பவே சட்டமும் உள்ளது. சட்டம் என்பதே அதிகாரத் தரப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு ஏற்பாடுதான். அதைப்பயன்படுத்தி ரணில் அரசாங்கம் மக்களைக் கட்டுப்படுத்த முற்படுகிறது. இதன் மூலம் தன்னைச் சுற்றியிருந்த எதிர்ப்பு வளையத்தை அது முதற்கட்டமாக இல்லாமற் செய்துள்ளது. அல்லது பலவீனப்படுத்தியுள்ளது. 

இது எதிர்பார்க்கப்பட்ட சில பதில்களையும் மிகச் சிக்கலான ஒரு நிலையையும் கொண்ட விடயமாகும்.

முதலில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது இது தொடர்பாகப் பல கேள்விகள் எழுந்தன. இந்தப் போராட்டத்தை முன்னெடுப்போர் யார்? எந்த அடிப்படையில் இதனை முன்னெடுக்கின்றனர்? இது இயல்பான தோற்றப்பாட்டின் விளைவா? அல்லது இதற்கு ஏதாவது பின்னணிச் சக்திகள் உண்டா? அப்படியென்றால் அவை எவை? அவற்றின் நோக்கம் – தேவை என்ன? அவை எந்தளவுக்கு இந்தப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளும். அல்லது விட்டுப் பிடிக்கும்? இதன் தொடர்ச்சி எப்படி அமையும்? இதற்கு அரசாங்கத்தின் எதிர்வினைகள் எப்படியாக இருக்கும்? அதை எப்படிப் போராட்டத்தரப்பினர் எதிர்கொள்வர்?

இந்த மாதிரிக் கேள்விகள் பல அப்போதே பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்பட்டதுண்டு. இதற்கான பதிலாக பல்வேறு விதமான தகவல்களும் கருத்துகளும் சமூக வலைத்தளங்களிலும் பிற இடங்களிலும் சொல்லப்பட்டதுமுண்டு. மட்டுமல்ல இதையொட்டிப் பல வாதங்கள் நடந்துமிருந்தன.

இன்று இப்படியான வாதங்களுக்கு ஏறக்குறைய பதில் கிடைத்த மாதிரியான ஒரு நிலை வந்துள்ளது.

 1. இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும்போதிருந்த உற்சாகமும் மக்களிடையே ஏற்பட்ட ஈர்ப்பும் மக்கள் ஆதரவும் இன்று குறைந்துள்ளது. அல்லது இல்லாமற் போயுள்ளது.
 • இந்தப் போராட்டத்தைப் பற்றி அரசாங்கம் சொல்கின்ற விடயங்களை அப்படியே நம்பாது விட்டாலும் அதைப் புறக்கணிக்கும் நிலையில் மக்களில் பெரும்பகுதியினர் இல்லை.
 • போராட்டத்தரப்பினரிடையே (முக்கியமான செயற்பாட்டாளர்களைக் கைது செய்து நடக்கும் களையெடுப்பை எதிர்க்கக் கூடிய அளவுக்கு மக்கள் துணியவில்லை. முன்வரவும் இல்லை. அதை ஒழுங்குபடுத்தும் அளவில் ஏனைய இரண்டாம் நிலைச் செயற்பாட்டாளர்கள் இல்லை.
 • போராட்டத்தை முன்னெடுப்போர் அதன் வழிப்படத்தைச் சரியான முறையில் தீட்டவில்லை. இதனால் அடுத்த கட்டம் என்ன? அதிகாரம் தன்னுடைய கை வரிசையைக் காண்பித்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதைக் குறித்து எத்தகைய தெளிவும் இல்லாதிருந்துள்ளனர். இதனால் மிக இலகுவாக ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தித் தனித்தனியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்துகிறது அரசாங்கம். இதை எதிர்க்கக் கூடிய நிலையில் போராட்டத்தரப்பு இல்லை என்பது அதனுடைய அப்பட்டமான பலவீனமாகி விட்டது.
 • கடந்த ஜூன், ஜூலையில் மிகப் பெரிய ஆற்றல் மிக்க சக்தியாக விளங்கி, அரசாங்கத்தையே ஆட்டம் காண வைத்த – நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியையே நாட்டை விட்டுத் தப்பியோட வைத்த – போராட்டமானது அடுத்த ஒரு மாதத்தில் சிறைக்கூடத்துக்குள் சிக்குப்பட வேண்டியிருப்பது ஏன்?
 • போராட்டத்திற்கு சரியான வழிப்படமும் நீண்டகாலத்திட்டமும் தலைமைத்துவமும் இல்லை என்று சொல்லப்பட்ட விமர்சனங்களையும் இதைக் குறித்து முன்வைக்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் போராட்டத் தரப்பினர் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? அதன் விளைவை – மெய்மையை இன்று உணரக்கூடியதாக உள்ளதல்லவா!
 • இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் மெய்யான அர்பணிப்புணர்வும் செயற்பாட்டு வேகமும் மாற்றத்தை விரும்பும் மனப்பாங்கும் இருந்தது. ஆனால் அதை உள் – வெளிச்சக்திகள் பயன்படுத்த விளைந்தன என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக பிராந்திய, மேற்குலக சக்திகள். இப்பொழுது அவற்றின் நோக்கம் – தேவை (அவை விரும்பிய எல்லைகள், இலக்குகள்) நிறைவேறியபின் மெல்ல இதிலிருந்து பின்வாங்கி விட்டன. இதைக்குறித்த புரிதல் ஏற்பட்டுள்ளதா?
 • உண்மையில் எதிர்பார்க்கப்பட்டது ஆட்சி மாற்றம். அதாவது ஆட்சிக் கட்டமைப்பு மாற்றம். மக்கள் நலனை மையப்படுத்திச் செயற்படக் கூடிய ஒரு அரசுக் கட்டமைப்பும் ஆட்சியுமேயாகும். அதற்குப் பொருத்தமான தலைமை வேண்டும். மக்கள் விரோத – குடும்ப ஆட்சி, தனி நபர் அதிகாரம், ஊழல் தரப்புகள் போன்றவை வேண்டாம் என்றே வலியுறுத்தப்பட்டன. இதிலே ஆள் மாற்றங்கள் நடந்திருக்கின்றனவே தவிர, கட்டமைப்பு மாற்றமோ ஆட்சித் தன்மையில் வேறுபாடுகளோ நிகழவில்லையே!
 • இப்பொழுது நடந்துள்ள தலைமைத்துவ மாற்றம் முன்னர் இருந்ததை விட எந்த விதத்தில் மேலானது? நாட்டுக்கும் மக்களுக்கும் இதனால் உண்டாகப் போகும் நன்மை – தீமைகளைக் குறித்த சரியான – ஒழுங்குபடுத்தப்பட்ட உரையாடல்களும் அவதானங்களும் நிகழ்கின்றனவா? தவறான வழியில் செல்வதாக இருந்தால் இதை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்கான தரப்புகள் – சக்திகள் ஏதுமுண்டா? ஏனெனில் எதிர்க்கட்சிகள் எல்லாமே பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அப்பால் எத்தகையை அரசியல் விளைவுகளையும் உண்டாக்கக் கூடிய திறனுடன் இல்லாதிருக்கின்றன. இந்தச் சூழலில் அரசுக்குக் கடிவாளத்தைப் பூட்டுவது யார்? எந்தத் தரப்பு?
 1. உண்மையான மக்கள் ஆதரவும் எதிர்பார்ப்பும் இந்தப் போராட்டத்தின் மீதிருந்தது. ஆனால், இன்று அது அரைகுறை நிலைக்குள்ளாகி விட்டது. போராட்டமும் அரை குறை நிலைக்குள்ளாகி விட்டது. இது அரசாங்கத்திற்கு மேலும் அதிக உற்சாகத்தைக் கொடுத்து விட்டிருக்கிறது. என்பதால்தான் குற்றச்சாட்டுகளோடு பின்னகர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகளும் முண்டியடித்துக் கொண்டு முன்னே வந்து அமைச்சுகளுக்கும் அதிகாரத்துக்குமாக அடிபடுகின்றன.
 1. வரலாறு தந்த மிக எழுச்சியான மக்கள் போராட்டமொன்று, உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த மக்கள் எழுச்சியொன்று இடைநடுவில் தடுமாறி நிற்பது மாற்றங்களை விரும்புவோர் அனைவருக்கும் கவலையளிப்பதே. ஆனால், இத்தகைய நிலை ஏற்படும் என்று இதனைக் கூர்மையாக அவதானித்தோர் ஏற்கனவே தீர்மானித்திருந்தனர். அவர்கள் தங்களுடைய கவலைகளை நட்புடன் வெளிப்படுத்தியுமிருந்தனர். இன்று உ லகமெங்கும் புரட்சிகர எண்ணமுடைய இளையை தலைமுறைக்குள்ளே பல விதமாகவும் ஊடுருவி, உள் நுழைந்து அமெரிக்கா தொடக்கம் பெரிய வல்லரசுகள் அனைத்தும் முயற்சிக்கின்றன. இதில் அவைமிகத் தேர்ச்சியையும் புதிய நுட்பங்களையும் தந்திரோபாயங்களையும் கடைப்பிடிக்கின்றன. இதைப் பற்றிய புரிதலோடு நாம் செயற்படவில்லை என்பது கவலையே.

இப்படிப் பல விடயங்கள் இந்தப் போராட்டத்துடன் சம்மந்தப்பட்டுள்ளன. இதை முற்று முழுதாக அறிவியற் கண்கொண்டு பார்க்க வேண்டியது அவசியமாகும். இலங்கைத்தீவில் பல விதமான போராட்டங்கள் இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிறகு நடந்துள்ளன. இதில் ஆயுதந்தாங்கிய போராட்டமும் அடங்கும். அரசியல் ரீயான ஜனநாயக வழிப் போராட்டங்களும் உண்டு. ஆனால் அரசு எல்லாவற்றையும் தன்னுடைய அதிகாரத்தின் மூலமாக அடக்குவதிலேயே கரிசனை காட்டி வந்துள்ளது. இப்பொழுதும் அதே வழிமுறையைத்தான் பின்பற்றுகிறது.

போராட்டம் ஒன்று ஏன் உருவானது? மக்கள் ஏன் அதனை ஆதரிக்கின்றனர்? அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? அவற்றின் நியாயத்தன்மை – தேவை என்ன? என்பதைக் குறித்து அரசாங்கம் ஒரு போதுமே சிந்திப்பதாக இல்லை. இது பிரச்சினைகளை மேலும் வளர்க்குமே தவிர, தீர்க்கப்போவதில்லை. இப்பொழுது வெளிப்படையான ஒரு உண்மை உண்டு.

போராட்டத்தரப்பினால்தான் அமைச்சரவையிலும் பிரதமர், ஜனாதிபதி பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அப்படியென்றால் போராட்டம் சரியான முறையில் செயற்பட்டு, பொருத்தமற்றவர்களை விரட்டியிருக்கிறது என்றே பொருளாகும். அப்படிப் பார்த்தால் அதை – இந்த வாய்ப்பை – உருவாக்கித்தந்த போராட்டக்காரர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றாகும். இந்த நிலையில் அவர்களை எதற்காக – எந்த அடிப்படையில் சிறைப்படுத்த முடியும்?

ஆனால் இந்தக் கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்கவோ அரசாங்கத்திலிருக்கும் வேறு எவருமோ பதில் சொல்லப்போவதில்லை. ஏன் ஊடங்களின் கவனமும் இவர்களிலிருந்து மெல்ல மெல்ல அகலகத் தொடங்கி விட்டது. நம்முடைய ஊடகங்களில் பலவற்றிலும் செல்வாக்குச் செலுத்துவன வெளித்தரப்புகளே. ஆகவே அவை தமக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை அனுசரித்தே செயற்படும்.

இப்பொழுது போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மிகச் சிறிய எண்ணிக்கையானோரே குரல் எழுப்புகிறார்கள், வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள். இவர்களும் அடுத்த கட்டத்தில் இலக்கு வைக்கப்பட்டு சிதறடிக்கப்படுவர்.

போராட்டமும் மக்கள் பங்கேற்பையும் மக்கள் ஆதரவையும் கோரி நிற்பதை விட, வெளிச்சக்திகளை அதிகம் நம்பும் அளவுக்கு மாறியுள்ளது. இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது போராட்டக்காரர்களில் ஒரு தொகுதியினர் வெளிநாட்டுத் தூதுவராலயங்களுக்கு தம்மீது மேற்கொள்ளப்படும் அரச வன்முறையையும் அடக்குமுறையையும் சொல்லி மகஜர்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது மக்களை நம்புவதை விட வெளிச்சக்திகளை அதிகமாக நம்பும் தமிழ்த்தலைமைகளின் வழிமுறையை ஒத்தது. தமிழ்த் தலைமைகளும் பல ஆயிரக்கணக்கான மகஜர்களை இந்தத் தூதரகங்களுக்குக் கடந்த காலத்தில் கொடுத்துள்ளனர். ஒரு மகஜர் கூடக் கவனத்திற் கொள்ளப்பட்டதில்லை. ஏதோ கொடுத்தோம் என இவர்களும் எதையோ தந்தார்கள், வாங்கினோம் என தூதரகத்தினரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். அவ்வளவுதான்.

இந்தப் போராட்டமும் அவ்வளவுதான் என்ற கட்டத்துக்கு வந்துள்ளதா? என்றே கேட்கத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்