முகமது அமிர் டி20 அணியில் இணைவார்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உறுதி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒயிட்-பால் கிரிக்கெட்டுக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

2-வது குழந்தை பிறப்பதாக எதிர்பார்த்த தேதியும், இங்கிலாந்து தொடருக்கான தேதியும் ஒன்றாக வந்ததால் முகமது அமிர் இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார். அதேவேளையில் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த ஹாரிஸ் ராஃப் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆறு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஐந்து முறை பாசிட்டிவ் என வந்துள்ளது.

2-வது குழந்தை பிறந்ததாக ஜூலை 17-ந்தேதி முகமது அமிர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இங்கிலாந்து சென்று தனிமைப்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் அணியில் இணைய காலஅவகாசம் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உறுதி செய்துள்ளது. இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும். இரண்டு முறையும் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் அமிர் இங்கிலாந்து செல்வார்.

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

முகநூலில் நாம்