மீண்டும் ரசிகர் கூட்டம் கிரிக்கெட் மைதானங்களில் 

உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மெல்ல மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படாத போட்டிகளாகவே அவை அமைந்தன.

செப்டெம்பரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றிருந்த அவுஸ்திரேலியா – நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், ஆண்கள் விளையாடும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மைதானத்தில் ரசிகர்களைக் கொண்டிராதவையாகவே நடந்துவந்தன.

பிரபலமான லீக் தொடர்களான CPL, IPL ஆகியனவும் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாது, ஒலிபெருக்கிகளில் ரசிகர்களின் கோஷங்களை ஒலிக்கவிட்டே நடத்திமுடிக்கப்பட்டிருந்தன. இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் LPL தொடரும் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாத தொடராகவே நடந்துவருகிறது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டிருக்கும் நிலையில் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களை மைதானத்துக்கு அனுமதிப்பதிலும் அது பிரதிபலித்திருக்கிறது.

கடந்த 27ஆம் திகதி அவுஸ்திரேலிய – இந்திய அணிகள் சிட்னியில் விளையாடிய முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது விளையாடும் வீரர்களுக்குமே உற்சாகம் தரும் விடயமாக அமைந்தது. அதே தினத்தில் நியூசிலாந்தில் ஆரம்பமான மேற்கிந்தியத் தீவுகள் – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டியிலும் மைதானத்தில் ரசிகர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டது.

மீண்டும் மைதானத்துக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட முதலாவது ஆண்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டு ரசிகர்கள் போட்டியின் நடுவில் மைதானத்துக்குள் நுழைந்ததால் சிறு சலசலப்பு ஏற்பட்டதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

ஒரு பக்கம் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தாலும் மக்கள் தமது அன்றாட வாழ்வை நகர்த்திச் செல்லவேண்டியதும் முக்கியமானதாகவே இருக்கிறது. மக்களது மன அழுத்தத்தைக் குறைக்கும் பொழுதுபோக்கு அம்சங்களும் விளையாட்டுப்போட்டிகளும்கூட இப்போதைய ‘புதிய வழமை’ வாழ்க்கை முறைக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது அவசியமாகிறது.

அதன் ஆரம்ப முயற்சிகளாக இப்போது மெல்ல மெல்ல கிரிக்கெட் மைதானங்களுக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதையும் பார்க்கலாம்.

ஆயினும், நியூசிலாந்துக்கு சென்றிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் குழாமிலிருந்த எழுவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் நாடுகள் தவிர ஏனைய நாடுகளில் கிரிக்கெட் மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்