மின்சார சபையின் முன்னாள் தலைவர் பெர்டினாண்டோ மீண்டும் COPE குழுவில் ஆஜர்

இந்திய பிரதமரின் அழுத்தத்தின் காரணமாகவே வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள 500 மெகாவாட் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்கியதாக COPE குழுவில் கருத்து தெரிவித்திருந்த இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் M.M.C. பெர்டினாண்டோ இன்று மீண்டும் COPE குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 10 ஆம் திகதி COPE குழுவில் இந்த கருத்தை தெரிவித்திருந்த பெர்டினாண்டோ அதன் பின்னர் தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், அதிக வேலைப் பளு காரணமாகவே தான் அவ்வாறு கூறியதாக தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியும் பெர்டினாண்டோவின் கருத்தை முற்றாக நிராகரித்திருந்தார்.

எனினும், கடந்த வருடம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அப்போதைய நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி பெர்டினாண்டோ , ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் Adani Green Energy நிறுவனத்திற்கு 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை மன்னார் மாவட்டத்திலும் கிளிநொச்சியின் பூநகரியிலும் ஆரம்பிப்பதற்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஜனாதிபதி தனக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவித்திருந்தார்.

COPE குழுவில் இன்று முன்னிலையான பெர்டினாண்டோ சத்தியப்பிரமாணத்தின் பின்னர் தனது கருத்துகளை மீளவும் முன்வைத்துள்ளார்.

எனினும், இன்று பிற்பகல் வரை அவர் தெரிவித்த கருத்துகள் வெளிக்கொணரப்பட்டிருக்கவில்லை.

இதனிடையே, கொழும்பு கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் COPE குழுவில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் முயற்சி, கடந்த காலங்களில் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் கைவிடப்பட்டது.

எனினும், இதுவரை கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என கடந்த நாட்களில் தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்