ஹொக்கி உலகக் கிண்ண தொடரில் இத்தாலியை தோற்கடித்த இலங்கை அணி

லண்டனில் நடைபெற்று முடிந்த 40 வயதுக்கு மேற்பட்ட மாஸ்டர்ஸ்  ஹொக்கி  உலகக்கிண்ண  தொடரில்  இலங்கையிலிருந்து பங்கேற்ற  மாஸ்டர்ஸ்  ஹொக்கி அணி  இரண்டாவது தரநிலைப்படுத்தும் சுற்றில் இத்தாலியை   4 க்கு 3  என்ற  கோல்கணக்கில்  தோற்கடித்தது.  

இதன்மூலம்  இலங்கை  மாஸ்டர்ஸ் ஹொக்கி அணி  14 நாடுகள்  பங்கேற்ற  இந்த உலகக்கிண்ண தொடரில் 13 ஆவது இடத்தை பிடித்தது.

இலங்கை  வரலாற்றில்  இரண்டாவது தடவையாவே மாஸ்டர்ஸ்  ஹொக்கி அணியானது   பலம்பொருந்திய நாடொன்றை தோற்கடித்தது. இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற  மாஸ்டர்ஸ்   உலகக்கிண்ண ஹொக்கி போட்டியில்   பங்கேற்ற இலங்கை அணி டென்மார்க்கை   2 க்கு 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது.  

அதன்பின்னர் இம்முறை   இலங்கை மாஸ்டர்ஸ் அணி  இத்தாலியை தோற்கடித்தது. கடந்த 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை  லண்டனில் 40 வயதுக்கு மேற்பட்ட மாஸ்டர்ஸ்   ஹொக்கி உலகக்கிண்ண  போட்டி நடைபெற்றது. இதில் ஆரம்ப சுற்றில்  இலங்கை அணி  ஆறு போட்டிகளிலும் படுதோல்வியடைந்தது. 

எனினும்    இரண்டாவதாக  நடைபெற்ற     அணிகளை  தரநிலை படுத்துவதற்கான போட்டி  சுற்றிலேயே  இலங்கை அணி  இத்தாலியை தோற்கடித்து 14 அணிகளில் 13 ஆவது இடத்தை  பிடித்துக்கொண்டது. 

மாஸ்டர்ஸ் ஹொக்கி அணி என்பது இலங்கையின் தேசிய ஹொக்கி அணியில் முன்னர்   இடம்பெற்ற  வீரர்களை கொண்டு  உருவாக்கப்படும்    ஹொக்கி  அணியாகும்.  

அந்த அடிப்படையிலேயே இம்முறை 40 வயதுக்கு மேற்பட்ட   வீரர்களைக் கொண்ட இலங்கையின் மாஸ்டர்ஸ் ஹொக்கி அணி லண்டனில் நடைபெற்ற   உலகக்கிண்ண  தொடரில் பங்கேற்றது. 

மார்லன் யாகொப்ஸ், திலுக வீரசூரிய, மகேஷ்  மதிவல, அசோக் பீரிஸ், ஷிஹார் அனீஷ்,  டெவன் பெரேரா (அணித் தலைவர்), லீனஸ் ஜயசேகரன், யோஹேன்  லெவ்கே,  நடித் குடகம, கசுன் ஹேரத்,  சம்பத் சுபசிங்க, கிரிதரன் பிரியதர்ஷன் (உதவி முகாமையாளர்) சக்தி ராசையா (உதவி முகாமையாளர்)  சஞ்சய் எட்கர்,  அனுராத பெர்னாண்டோ, லுசாந்த பெரேரா, டங்கன் தேவேந்திர(முகமையாளர்), தீபிக காரியவசம், ஆகியோர்  இலங்கையிலிருந்துமாஸ்டர்ஸ் ஹொக்கி  உலகக்கிண்ண  போட்டி தொடரில் பங்கேற்க சென்றிருந்தனர். 

இது இவ்வாறிருக்க இலங்கையின்   35 வயதுக்குமேற்பட்ட மாஸ்டர்ஸ்  ஆண்கள் ஹொக்கி அணியும்   40 வயதுக்கு மேற்பட்ட  மாஸ்டர்ஸ் பெண்கள்  ஹொக்கி அணியும்  லண்டனில் நடைபெற்ற   உலகக்கிண்ண   தொடரில் சகல போட்டிகளிலும் தோல்வியடைந்தன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்