மலையக மக்களுக்கு பாரிய அநீதி : வடிவேல் சுரேஷ்

பதுளை மாவட்டத்தில் நிர்மாணிப்பதற்கு மதிப்பிடப்பட்டிருந்த 16 கலாசார மத்திய நிலையங்களுக்குமான வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இது தேசிய அநியாயம் என்பதுடன் மலையக மக்களுக்கு செய்யும் பாரிய துராேகம். அத்துடன் இந்திய அரசாங்கத்தின் நன்கொடைகளை பெற்றுக்கொள்ளும் அரசாங்கம் இந்திய வம்சாவளி மக்களை புரக்கணித்து வருகின்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் தெரிவித்தார்.  

நாட்டில் இனவாதம், மதவாதம் பேசாது யுத்தம் செய்யாது தேசிய அபிவிருத்திக்கு பாடுபட்ட மலையக மக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நாம் பயங்கரவாதிகள் அல்ல, இந்த அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல, இந்த நாட்டிற்கு எதிரானவர்களும் அல்ல. நாம் இந்த நாட்டினை நேசிக்கின்றோம். ஆனால் எமது சமூகத்தை நீங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று (8) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, பதுளை மாவட்டத்தில் 16 கலாசார நிலையங்கள் நிர்மாணிப்பதற்கும் பணி நிறுத்தப்பட்டிருப்பது தொடர்பாகஎழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வழங்கிய பதில் பொய்யென சுட்டிக்காட்டி விவாதித்த போதே அவர் இதனை கூறினார். 

தோட்டப்புற மற்றும் நகர  பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் பதுளை மாவட்டத்தில் 16 கலாசார நிலையங்களை நிர்மாணிப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் அங்கீகாரம் வழங்கி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரான இருந்த தற்போதைய பிரதமர் 100 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்தாார். 

இந்த 16 கலாசார நிலையங்களுக்குமான காணிகளை ஒதுக்கியது மட்டுமல்லாது காணிகளுக்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் தோட்ட மக்களுக்கு இந்த கலாசார மண்டபம்  தேவையில்லை என்றே அரச அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ இந்த வேலைத்திட்டத்தை நிறுத்தியுள்ளனர். இது  தேசிய அநீதியாகும். மக்களின் பணம் இவ்வாறு அநியாயமாக்கப்பட்டிருக்கின்றது. 

ஆகவே  மலையக மக்களுக்கு செய்திருக்கும் பாரிய துராேகமாகும். இந்த அநியாயத்தை ஏன் செய்தார்கள் என்பது தொடர்பில் சரியான பதிலை சபைக்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்