மலேசிய பிரதமர் மகாதீர்: “இந்தியா மீது எந்த பதில் நடவடிக்கையும் இல்லை”

மலேசியாவிலிருந்து வரும் பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா பலத்த கட்டுபாடுகளை விதித்துள்ளதற்கு பதிலடி ஏதும் கொடுக்கப்போவதில்லை என மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்தியா மலேசியவிலிருந்து இறக்குமதியாகும் பாமாயிலுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில் இன்று இந்தியா விதித்த கட்டுபாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர், “பதிலடி கொடுக்க நாங்கள் சிறிய நாடு; இதனை எதிர்கொள்ள சில வழிகளை கண்டறிய வேண்டும்,” என தெரிவித்துள்ளார் என்கிறது ராயட்டர்ஸ் செய்தி முகமை.

கடந்த ஐந்து வருடங்களாக மலேசியாவின் மிகப்பெரிய பாமாயில் சந்தையாக இந்தியா உள்ளது.

முன்னதாக சுவிட்சர்லாந்தில் டாவோஸில் ஜனவரி 21 முதல் 24 தேதி வரை நடைபெறவிருக்கும் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் இந்தியாவின் பியூஷ் கோயல், மலேசியாவின் சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரை சந்திக்க மாட்டார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ராயர்டர்ஸ் செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – மலேசியா இடையேயான பாமாயில் வர்த்தகம்

உலகளவில் இந்தோனீசியாவிற்கு பிறகு பாமாயில் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடக மலேசியா விளங்குகிறது.

இந்தியா - மலேசியா இடையேயான பாமாயில் வர்த்தகம்

இந்தோனீசியா இந்தியாவின் பாமாயில் இறக்குமதிகளில் மூன்றில் இரண்டு பங்கு தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. ஆனால், மலேசியாவின் குறைவான வரிகளால் 2019இல் இந்தோனீசியாவைவிட அதிக அளவிலான பாமயிலை இந்தியா மலேசியாவிடம் இறக்குமதி செய்தது.

என்ன சொல்லியிருந்தார் மகாதீர் மொகமத்?

காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசியா கவலை கொண்டுள்ளது என்றும் டிசம்பர் மாதம் கோலாலம்பூரில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டின் முடிவில் மலேசிய பிரதமர் கூறியிருந்தார்.

முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்திலும் இதே கருத்தை அவர் கூறியிருந்தார்.

“இஸ்லாமியர்கள் மட்டும் இந்தியக் குடிமக்களாக ஆவதில் இருந்து தவிர்க்கப்பட்டால் அது நியாயமல்ல,” என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை அவர் விமர்சித்திருந்தார்.

முகநூலில் நாம்