மருந்துப் பொருட்கள் தபால் மூலம் விநியோகம்

மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் பொதுமக்கள் தற்போது அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

நிறை அல்லது தூரத்தை பொருட்படுத்தாது 75 ரூபாவுக்கு வீட்டிற்கே மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அரச வைத்தியசாலைகளில் கிளினிக்கிற்காக பதிவுசெய்துள்ள நோயாளர்களுக்கு மாத்திரமே இவ்வாறு மருந்துப்பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

தாம் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளுக்கு தொலைபேசி ஊடாக அழைத்து, தமது கிளினிக் இலக்கத்தை கூற வேண்டும். பெயரை கூறவும். அடுத்ததாக முகவரியை கூற வேண்டும். தொடர்பை ஏற்படுத்தக்கூடிய தொலைபேசி இலக்கத்தை கூற வேண்டும். அதனை தொடர்ந்து உங்களின் மருந்துகள் பொதி செய்யப்பட்டு தபால் மூலம் விநியோகிக்கப்படும்.

சில சந்தர்ப்பங்களில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் ஒருவர் அவிசாவளையில் இருக்கக்கூடும். அவ்வாறானவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று, உங்களின் கிளினிக் புத்தகத்தை காண்பிக்க வேண்டும்.

அப்போது குறித்த வைத்தியசாலையின் ஊடாக வழங்கக்கூடிய மருந்துப்பொருட்களை வழங்கப்படும். கிளினிக் செல்லும் வைத்தியசாலைக்கு அழைப்பை ஏற்படுத்தி மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது

என வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். ஆனமடுவ – பதவிய பகுதியில் இன்று மருந்துகள் விநியோகிக்கப்பட்டன. தபால்காரர்களே அந்த பொறுப்பை ஏற்றுள்ளனர். நிறை மற்றும் தூரத்தை பொருட்படுத்தாது, பொதியொன்றுக்கு 75 ரூபா என்ற குறைந்த கட்டணத்தையே நாம் அறவிடுகின்றோம். அரச மருந்தகங்களில் வழங்கப்படும் மருந்துப்பொருட்களையும் விநியோகிக்கின்றோம்

என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கிளினிக்கிற்காக பதிவுசெய்துள்ள நோயாளர்களுக்கு மருந்துகளை தயார்ப்படுத்தும் நடவடிக்கை, கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டதுடன், தபால் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் நாளைய தினம் அவை விநியோகிக்கப்படவுள்ளன.

தபால் திணைக்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், தமது உத்தியோகத்தர்களின் ஊடாக மருந்துப்பொருட்களை விநியோகிக்கும் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிபிடிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கூறினார்.

இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துப்பொருட்கள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில், கம்பளை – உடபலாத பிரதேச செயலகத்தில் இன்று விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் மருந்துப்பொருட்கள் இன்மையால் இன்று பாரிய அசெளகரியங்களை எதிர்நோக்கினர்.

இதேவேளை, பிபிலை மற்றும் மெதகம பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மருத்துவ முகாம்களை நடத்தும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

வைத்தியசாலைகளுக்குள் நோயாளர்கள் கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்