மருந்தக நிலைய உரிமையாளர்களுடன் வவுனியாவில் கலந்துரையாடல்

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதை மருந்துகளின் பாவனைகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தி நல்லதொரு சமூகத்தினை உருவாக்கும் நோக்கத்துடன் வவுனியா மாவட்ட மருந்தக உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வவுனியாவிலுள்ள வர்த்தக சங்க காரியாலயத்தில், வர்த்தக சங்கத்தின் ஒழுங்கமைப்பில் நேற்று வர்த்தக சங்க செயலாளர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மருந்தக நிலைய உரிமையாளர்கள் தமது நிலையங்களில் தகுதி வாய்ந்த மருந்தாளரை பணிக்கு அமர்த்தி மருந்துகளைக் பெற்றுக்கொள்ளச் செல்லும் நோயாளர்கள் வைத்தியரினால் எழுதிக்கொடுக்கும் மருத்துவச்சிட்டைக்கு மட்டும் மருந்து வகைகளை வழங்கவும், சகல மருந்தகங்களுக்கும் குளிரூட்டி அமைக்கப்பட்டு மருந்துகள் பழுதின்றி பராமரிப்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சில மருந்து வில்லைகளை மாணவர்கள் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் ஒருவித போதை ஏற்படுவதையும், இதனால் மாணவர்கள் அவ்வில்லைகளை பாடசாலைகளுக்கு எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் வில்லைகளை அளவிற்கு அதிகமாக வழங்குவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மருந்தகங்களுக்கு மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்ளும் போது தகுதி வாய்ந்த நிறுவனங்களை நாடிப் பெற்றுக்கொள்ளுமாறும், கறுப்புச் சந்தை வியாபாரங்களை தவிர்க்குமாறும் மருந்தக நிலைய உரிமையாளர்களுக்கு பொலிஸாரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் , வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , சுகாதார வைத்திய அதிகாரி , உணவு மருந்து சுகாதார பரிசோதகர் , நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

முகநூலில் நாம்