மருத்துவ சான்றிதழை பெறுவதில் சிரமங்கள்!

அம்பாறை தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தில், வைத்திய சான்றிதழ்களைப் பெறுவதில் சாரதிகள் எதிர்கொள்ளும் இடர்களை நிவர்த்தி செய்து தருமாறு, அம்பாறை மாவட்ட சாரதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அம்பாறையிலுள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தில் காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிற்பதற்கு, மருத்துவ சான்றிதழை பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பல தூரப் பிரதேசங்களில் இருந்து சுமார் 200க்கும் மேலான சாரதிகள், அதிகாலை 02 மணியளவில் வீடுகளில் இருந்து பிரயாணம் செய்து காலை 08.30 வரை காத்திருந்தும் தற்போது 50 பேருக்கு மாத்திரமே மருத்துவ சான்றிதழை பெறுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

கொரோனா அசாதாரண காலத்தில், பலரின் சாரதி அனுமதிப் பத்திரங்கள் காலாவதியாகியுள்ளதால் பலர் மருத்துவ சான்றிதழைப் பெறவேண்டிய தேவை அதிகரித்துள்ளது. இதனால் இரண்டு, மூன்று நாள்கள் சென்று அலைந்தும் மருத்துவச் சான்றிதழை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, முற்பதிவு முறைமையை ஏற்படுத்தி, இலகுபடுத்துவதன் மூலம் மருத்துவ சான்றிதழ் பெறும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பல நாள்கள், பல மணி நேர வீண் விரயத்தை தவிர்க்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அதிகாரிகளிடம் அம்பாறை மாவட்ட சாரதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முகநூலில் நாம்