மதுபானம் என நினைத்து கிருமிநாசினியை அருந்திய குடும்பஸ்தருக்கு ஏற்பட்டநிலை

வீட்டு அறையில், விவசாயத்திற்கு தெளிக்க பயன்படுத்தப்படும் கிருமிநாசினிக்கு அருகில் மதுபானத்தை வைத்திருந்த குடும்பஸ்தர்,கிருமி நாசினியை மதுபானம் என நினைத்து அருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .

இறந்தவர் கணேசபுரம் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை நாகேஸ்வரன்( வயது 62) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.

யுத்தத்தில் மனைவி மற்றும் பிள்ளைகளை பறிகொடுத்து இறுதியில் ஒரு மகன் உடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி தான் வாங்கி வந்த மதுபான போத்தலை விவசாயத் தேவைக்கு பயன்படுத்தும் கிருமிநாசினிக்கு அருகில் வைத்துள்ளார்.

பின்னர் இரவு மதுபானத்தை அருந்துவதாக நினைத்து கிருமிநாசினியை அருந்தியுள்ளார். உடனடியாக அவர் கிளிநொச்சி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். உடற்கூறு பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

முகநூலில் நாம்