
கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (31) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான ஆசிய கிண்ண கிரிக்கெட் பி பிரிவு ஆரம்பப் போட்டியில் 5 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை இலங்கை ஈட்டிக்கொண்டது
மதீஷ பத்திரணவின் 4 விக்கெட் குவியலுடனான துல்லிய பந்துவீச்சு, சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க ஆகியோர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பெற்ற அரைச் சதங்கள் என்பன இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
பங்களாதேஷ் சார்பாக நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 89 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் ஏனைய பத்து வீரர்களின் கூட்டு வெறும் 67 ஓட்டங்களாக இருந்தது. உதிரிகளாக 8 ஓட்டங்கள் கிடைத்தது.
பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 39 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது.