மண்சரிவினால் 3,194 குடும்பங்கள் பாதிப்பு

அதிக மழைவீழ்ச்சியினால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக  3 ,194 குடும்பங்களை சேர்ந்த 12 ,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையினால் சப்ரகமுவ மாவட்டத்தின் இரத்தினபுரி மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி  பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

கடந்த சில நாட்களாக பலாங்கொடையில் பெய்து வரும் கனமழையினால் பலாங்கொடை – மாரதென்ன பகுதியில் தோட்டக்குடியிருப்பின் மீது மண்மேடு  சரிந்து வீழ்ந்துள்ளது. 

மண்சரிவு அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட மாரதென்ன முதலாம் பிரிவிலுள்ள தோட்டக்குடியிருப்பிலேயே இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது. 

அனர்த்தத்தில் நான்கு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 16 பேர் இடம்பெயர்ந்து தமது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

நானுஓயா பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட நானுஓயா நகரினை அண்மித்த பகுதியில் மண்சரிவு பதிவாகியுள்ளது. 

இதன் காரணமாக நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா – ஹட்டன் , நுவரெலியா – டயகமவிற்கான போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலங்களுக்கு ஸ்தம்பிதமடைந்திருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

நுவரெலியா வீதி அதிகார சபை ஊழியர்களும் பொலிஸாரும் இணைந்து மண்மேட்டை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, பலத்த காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையினால் மாத்தளை – பலகடுவ பகுதியில் A9 பிரதான வீதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.  

இந்த மரம் இன்று அதிகாலை முறிந்து  வீழ்ந்துள்ளதால், குறித்த வீதியூடாக ஒருவழி போக்குவரத்து மாத்திரமே முன்னெடுக்கப்பட்டது.

நிலவும் மழையுடனான வானிலையினால் நுவரெலியா, ஹட்டன், கொத்மலை கல்வி  வலயங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மத்திய மாகாண ஆளுநர் இன்று விடுமுறை அறிவித்திருந்தார். 

நுவரெலியா கல்வி வலயத்தின் பாடசாலைகள் இன்று மூடப்பட்டிருந்தன. 

எனினும், வலப்பனை, ஹங்குராங்கெத்த கல்வி வலயங்களில் இன்று கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்