மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும்

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும்                சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் மற்றும் சமுர்த்திப் பணிப்பாளருடன் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற மெய்நிகர் வழியினூடான கலந்துரையாடலின் போதே,   குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், சமுர்த்தி திட்டத்தின் ஊடாக 2 இலட்சம் குடும்பங்களை வலுப்படுத்தும் வேலைத் திட்டம் நாடளாவிய  ரீதியில் நடைபெற்று வருகின்ற நிலையில், யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடற்றொழில்சார் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்தத் திட்டத்தின் ஊடாக யாழ்பாபாண மாவட்டத்தில் கடற்றொழில்சார் குடும்பங்களை வலுப்படுத்துவதற்காக சுமார் 4 கோடி 57 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பயனாளர்களாக யாழ் மாவட்டத்தில் உடுவில் தவிர்ந்த 14 பிரதேச  செயலக பிரிவுகளில் 933 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் மற்றும் சமுர்த்திப் பணிப்பாளர் ஆகியோரிடம் கடற்றொழில் அமைச்சர் கேட்டறிந்து  கொண்டார்.

திட்டத்தில் தெரிவு செய்யப்படடவர்கள் படகு இயந்திரம், ஐஸ் பெட்டி, ஜிபிஎஸ் உபகரணம், வியாபாரத்தில் ஈடுபடுவதற்கான துவிச்சக்கர வண்டி போன்ற தொழில் உபகரணங்களை கோருகின்ற போதிலும், பெரும்பாலான பயனாளர்கள் வலைகளை கேட்டுள்ளதாகவும், கொள்வனவு செய்வதற்கான ஒழுங்கு முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பிரதேச செயலாளர்கள், ஒரு பகுதி  நிதி மட்டுமே தற்போது கிடைத்துள்ள நிலையில் முழுமையான நிதி கிடைத்ததும் தெரிவு செய்யப்பட்ட அனைவரது எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்ற முடியும் எனவும் தெரிவித்னர்.

இந்நிலையில், முதற்கட்டமாக ஒரு கோடி 50 இலட்சம் ரூபாய் நிதியினை அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் பிரித்து வழங்கியுள்ளதாக தெரிவித்த யாழ் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், எஞ்சிய நிதி கிடைத்தவுடன் அனைவருக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், அநேகமான பயனாளர்கள் வலைகளை பெற்றுக்கொள்வதற்கு ஆர்வம் செலுத்தி வருகின்றமையினால், வடகடல் நிறுவனத்திடம் இருந்து வலைகளை கொள்வனவு செய்வது இலகுவானது என்றபோதிலும், கடந்த அரசாங்க காலத்தில் வடகடல் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட வலைகளின் தரம் தொடர்பான குற்றச்சாடடுக்கள்  இருப்பதனால் கொள்வனவு செய்யப்படுகின்ற வலைகளின் தரம் ஆராயப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கடற்றொழில்சார் திட்டங்களுக்காக அனுப்பி வைக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீடுகளை ஏனைய திடடங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், யாழ் மாவட்டத்தில் இருந்து மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், மேற்கொள்ளப்படுகின்ற ஏனைய திட்டங்கள் தொடர்பாக தனக்கிருக்கும் கடப்பாட்டினை சுட்டிக்காட்டியதுடன், அதுதொடர்பாக விரைவில் விரிவாகக் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்