மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்

மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
வேண்டாம் என இலங்கை அரசுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த
விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், சீன அரசாங்கத்தினால் சீன
விவசாயப் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும்
இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன்
நவம்பர் 25, கையொப்பமிட இரகசிய ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை ஊடகங்களில்
அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற
போர்வையில் எங்களின் நிலத்தை அபகரிக்கும் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி
நிரலை அறிந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு
துணிச்சலாக மறுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர்
சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

ஐ.நா சபையின் அறிக்கையின் பிரகாரம், இனவழிப்பு யுத்தத்தின் இறுதி ஆறு மாத
காலப் பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள்
கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களும் சிறுமிகளும்
சிறிலங்கா ஆயுத படையினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். குழந்தைகள் உட்பட
ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

சீனா, அனைத்தையும் நன்றாக அறிந்திருந்தும் தமிழர்களை தொடர்ந்து
அவமானப்படுத்துவதையும், சர்வதேச அரங்கில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காமல்
தடுப்பதையும் வழக்கமாக கொண்டதுடன், போர்க்குற்றவாளிகளை ஆதரித்தும்
இலங்கையை கடன் பொறியில் சிக்க வைத்து அச்சுறுத்தியும் இலங்கையை
கைப்பற்றும் அதன் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது.

தமிழர் விரோத மனப்பான்மை கொண்ட சீனா வடக்கிலும் கிழக்கிலும் தனது
செல்வாக்கை அதிகரிக்கச் செல்லும் தீய நோக்கத்துடன் எமது கடலையும்
நிலத்தையும் அபகரித்து எமது பாரம்பரிய மண்ணில் எம்மை அகதிகளாக்கி
இனப்படுகொலை செய்யும் முயற்சிகளை நாம் ஏற்கனவே கண்டித்திருந்தோம்  என
அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்