
காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்த கருத்து மக்களை மேலும்
கோபத்திற்கு உள்ளாக்கியது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று நாடாளுமன்றின் கவனத்திற்கு
கொண்டுவந்தார்.
காணாமலாபோவார்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ள அந்த அலுவலகம் நிறுவப்பட்ட
நிலையில் விசாரணைகளை மேற்கொள்ளாமலேயே இவ்வாறான அறிக்கையை வெளியிடுவது,
விசாரணை குறித்த நம்பிக்கையைத் தராது என சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தமது பிள்ளைகளை, கணவரை இராணுவத்திடம் தாமே கையளித்ததாக பெற்றோர்
மற்றும் மனைவிமார் தெரிவிக்கின்ற நிலையில் தம்மிடம் எவரும் சரணடையவில்லை
என இராணுவம் வெளியிடும் அறிக்கை மக்களுக்கு மேலும் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆகவே நீதி அமைச்சின் கீழ் உள்ள காணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமாகவும்
பக்கச்சார்பின்றியும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டில்
குடியேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த சுமந்திரன்,
இருப்பினும் நாட்டில் அவர்களுக்கு போதுமான அளவு வசதிகள்
ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.