மகளிர் கிரிக்கெட் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை வெளியிட்டது ஐசிசி

அதிக எண்ணிக்கையிலான நாடுகளின் பங்கேற்புடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கொண்ட வரலாற்று முக்கியம் வாய்ந்த மகளிர் எதிர்கால சுற்றுப்பயண திட்டம் ஒன்றை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) முதல் தடவையாக வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டிகள் மற்றும் இருதரப்பு சர்வதேச தொடர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டியை எதிர்கால சுற்றுப்பயண திட்டம் எடுத்துக்காட்டுகிறது.

இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதி வரை சகல அணிகளும் விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்கள் மகளிர் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய இலங்கை மகளிர் அணி சொந்த மண்ணில் நான்கு நாடுகளுக்கு எதிரான தொடர்களிலும் அந்நிய மண்ணில் நான்கு நாடுகளுக்கு எதிரான தொடர்களிலும் விளையாடவுள்ளது.

2022 முதல் 2025 வரையான சுழற்சி கிரிக்கெட் பருவகாலத்தில் இந்தியா, நியூஸிலாந்து, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளை தனது சொந்த மண்ணில் இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

இதனைவிட இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய நாடுளுடன் அந்நிய மண்ணில் இலங்கை விளையாடவுள்ளது.

இந்த சுழற்சி கிரிக்கெட் பருவகாலத்தில் மகளிர் கிரிக்கெட் அணிகள் மொத்தமாக 7 டெஸ்ட் போட்டிகள், 135 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 159 சர்வதேச இருபது கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றில் (மொத்தம் 301 போட்டிகள்) விளையாடவுள்ளன.

2022 – 2025 சுழற்சி கிரிக்கெட் பருவகாலத்தின் ஒரு பகுதியாக ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்பில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகள் கொண்ட இரு தரப்பு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடும். இத் தொடர்கள் இந்தியாவில் 2025இல் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றாக அமையும்.

இந்தத் தொடருடன் பெரும்பாலான நாடுகள் மகளிர் சர்வதேச இருபது கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்