போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடும் மே.தீவுகள் அணி சற்று தடுமாற்றம்!

West Indies’ Shannon Gabriel, center, celebrates with teammates the dismissal of England’s Jos Buttler during the second day of the third cricket Test match between England and West Indies at Old Trafford in Manchester, England, Saturday, July 25, 2020. (Martin Rickett/Pool via AP)

நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இன்றைய ஆட்டநேர முடிவில், போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நியூஸிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி 185 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

ஆட்டநேர முடிவில் ஜேர்மைன் பிளக்வுட் 80 ஓட்டங்களுடனும் அல்சார்ரி ஜோசப் 59 ஒட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்தனர். இருவரும் இணைந்து 123 பந்துகளுக்கு 107 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துள்ளனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், நெய்ல் வாக்னர் 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ, ட்ரென்ட் போல்ட், கெய்ல் ஜெமீசன் மற்றும் டேர்ல் மிட்செல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

ஹெமில்டன்- சீடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய நியூஸிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுகள் இழப்புக்காக 519 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது நியூஸிலாந்து அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக, அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 251 ஓட்டங்களையும் டொம் லதம் 86 ஓட்டங்களையும் கெய்ல் ஜேமிசன் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கெமார் ரோச் மற்றும் செனோன் கெப்ரியல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் அல்சார்ரி ஜோசப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 138 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோன் கெம்பல் 26 ஓட்டங்களையும், ஜேஸன் ஹோல்டர் ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ 4 விக்கெட்டுகளையும் ஜெமீசன் மற்றும் வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் போல்ட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன்பிறகு 381 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை நியூஸிலாந்து அணி, போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

தற்போது இன்னமும் 4 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாளை மேற்கிந்திய தீவுகள் அணி நாளை தொடரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்