
கடந்த 18.11.2022 வெள்ளிக் கிழமை கிளிநொச்சி புறநகர் பகுதியில் உள்ள 1AB பாடசாலையில் மாணவர்கள் காலை பாடசாலைக்கு வருகின்ற போது பாடசாலை நலன்விரும்பிகள் வலயம் மற்றும் பாடசாலையின் அனுமதியுடன் மாணவர்களையும் அவர்களது உடமைகளையும் சோதனைக்குட்படுத்தினார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுமன்றி வடக்கில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையின் எதிரொலியே இந்த பரிசோதனைக்கு காரணமாக இருந்தது. பரிசோதனையின் போது ஆறு மாணவர்களை தவிர ஏனைய அனைவரும் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த ஆறு மாணவர்களும் அப்பாடசாலையின் தரம் 11 கல்வி கற்கும் 16 வயதுடையவர்கள் இதில் ஒருவரிடம் கஞ்சா, இருவரிடம் மாவா ( போதைப்பொருள் அடங்கிய பாக்கு) இருவரிடம் புகையிலையும் சுண்ணாம்பும், இன்னொருவனிடம் இரும்பு கம்பி. ஆனாலும் குறித்த மாணவர்களிடமோ அல்லது பாடசாலையின் ஏனைய மாணவர்களிடமோ இச் சம்பவம் தொடர்பில் எவ்வித பதற்றமோ அல்லது பயமோ போன்ற உணர்வுகள் எதுவும் ஏற்படவில்லை என நிலைமைகளை அவதானித்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். ஏன் மாணவிகளிடமும் இதே நிலைமைதான் அவர்களிடம் எந்த பிரதிபலிப்பும் காணமுடியவில்லை இது வழமையான ஒரு நிகழ்வு என்பது போலவே ஏனைய மாணவர்களின் பிரதிபலிப்புக்கள் இருந்தன என அந்த ஆசிரியர் மேலும் தெரிவித்தார்.
புத்தக பைகளுக்குள் போதைபொருள் இருப்பது என்பது சாதாரண விடயமாகிவிட்ட காலமாக மாறிவருகிறது 2009 இற்கு முன் யுத்தத்தால் பெருமளவு இளம் சமூகத்தை இழந்துவிட்டோம் இப்பொழுது போதை பொருள் பாவனையால் பெருமளவுக்கு இளம் சமூகத்தை நாம் இழந்து வருகின்றோம். இந்த நிலைமை ஒரு இனத்திற்கு ஆரோக்கியமானதல்ல எனவும் கவலை தெரிவித்தார் அவர். வெற்றிலை போட்டு பிடிப்பட்டால் அதுவே பெரிய விடயமாக இருந்த எங்களுடைய காலத்தையும் இன்றைய நிலைமையினையும் ஒப்பிட்டு நோக்கும் போது எங்கள் இனம் தொடர்பில் மிகப்பெரும் கேள்வி எழுகிறது என்றார்.
மாணவர்களிடம் போதைப்பொருள்
இந்த ஆறு மாணவர்களில் ஒரு சிலரை சந்தித்து அவர்களுடன் மனம்விட்டு பேசிய போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தன
பெரும்பாலும் தரம் ஒன்பது (14 வயது) முதல் உயர்தரம் வரையான மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துகின்றவர்களாக இருக்கின்றோம். எங்கள் வகுப்பில் ஒரு பிரிவில் 15 ஆண்கள் இருக்கின்றோம். இதில் 5 பேர் தான் எதையும் பயன்படுத்துவதில்லை ஏனையவர்கள் அனைவரும் மாவா, அல்லது கஞ்சா, அல்லது புகையிலையுடன் சுண்ணாம்பு கலந்து பயன்படுத்துகின்றோம்.
ஆரம்பத்தில் பயமாக இருந்தது ஒரு தடவை பயன்படுத்திய பிறகு இப்போது அடிக்கடி இவற்றில் ஏதாவது ஒன்று தேவையாக உள்ளது. மாவா ஒரு பைகற் 200 ரூபா நான்கு அல்லது ஐந்து பேர் பயன்படுத்தலாம், கஞ்சா மூன்று பீடிக்கு பயன்படுத்தும் அளவு 500 ரூபா இதனையும் மூன்று அல்லது நான்கு பேர் பயன்படுத்துவோம். எதுவுமே இல்லை கையில் பணமும் இல்லை என்றால் புகையிலையுடன் சுண்ணாம்பு கலந்து அதனை மாவா போன்று வாயிக்குள் வைத்து சப்பிக்கொள்வோம்.
பணம் எப்படி கிடைக்கிறது
எங்களுடைய நண்பர்கள் சிலர் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கிடைக்கும் கூலி வேலைக்கு செல்கின்றனர் முக்கியமாக கிளிநொச்சி நகருக்கு அன்மையில் ஏ9 வீதியோடு உள்ள கப் யூஸ் கம்பனி ஒன்றுக்கு வேலைக்கு செல்வார்கள் ஒரு கப் யூஸ்க்கு ஒரு ரூபா கிடைக்கும் நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் இரண்டாயிர்து ஜநூறு யூஸ் கப் செய்து கொடுத்தால் அதில் கிடைக்கும் பணம் இதை விட வேறு கூலி வேலைக்கு போவார்கள் சிலர் வீட்டில் பள்ளி கூடத்திற்கு அதுக்கு காசு வேண்டும், இதுக்கு காசு வேண்டும் என்று சொல்லி அவ்வப்போது பணத்தை எடுத்து வருவார்கள். இதனை கொண்டு தேவையானவற்றை வாங்குவோம்.
பேட்டையில் வாங்குகிறார்கள்
கிளிநொச்சி அந்த இடத்தை (இடத்தின் பெயரை குறிப்பிட்டு) நாங்கள் பேட்டை என்றுதான் சொல்லுவம் அங்கு எந்த நேரத்திற்கு சென்றாலும் வாங்கலாம் ஆனால் நாங்கள் அங்க செல்வது இல்லை, ஊரில உள்ள சில அண்ணாக்கள் வாங்கித் தருவார்கள். இதனைவிட சில பெட்டிக் கடைகளில் வாங்கலாம், இதனையும் விட ஊரில உள்ள சிலரிடமும் வாங்கலாம் ஆனால் அவர்கள் எல்லோருக்கும் கொடுக்க மாட்டார்கள் நம்பிக்கையான ஆட்களுக்கு மட்டும்தான் கொடுப்பாபர்கள்.
பாடசாலைக்குள் எப்படி பயன்படுத்துகின்றீர்கள்
பள்ளிக் கூடத்திற்கு வரும் போது கொண்டு வருவார்கள் அல்லது பணத்தை வெளியால ஒரு சில அண்ணாக்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தால் அவர்கள் கொண்டு வந்து தருவார்கள். எங்களுடைய பாடசாலையில் பின் வீதியில் சில இடங்களில் அவர்கள் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள் அந்த இடம் எங்களுக்கும் அவர்களுக்கும் மட்டுதான் தெரியும் இடைவேளை நேரம் அல்லது ப்ரி பாடவேளை மலசல கூடத்திற்கு சென்று பயன்படுத்துவோம்
கஞ்சா என்றால் மூன்று பேர் அல்லது நான்கு பேர் மலசல கூடத்திற்குள் இருந்து குடிப்பார்கள் அது மணக்கும் அதனால பௌக்கம் (சுவிங்கம்) சப்புவார்கள். வகுப்பில் பெரும்பாலும் முன்வரிசையில் இருக்கமாட்டார்கள். கஞ்சா அடிச்ச பிறகு சிலருக்கு தலைசுத்து மயக்கம் வந்தால் தலை வலிக்குது என்று சொல்லிப் போட்டு மேசையில் படுத்துவிடுவார்கள். மாவா என்றால் வாய்க்குள் வைத்துக்கொண்டு வகுப்புக்குள் இருப்பார்கள்
இருப்பும் கம்பியுடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன்
இந்த சோதனையின் போது மாணவன் ஒருவனின் புத்தக பையினுள் இரும்பு கம்பி ஒன்றும் காணப்பட்டது. அதற்கு பின்னால் ஒரு ஆபத்தான நிலைமைகள் உண்டு. தரம் 11 படிக்கும் மாணவன் ஏன் இரும்பு கம்பியுடன் பாடசாலைக்கு வந்தான் என இவனிடம் கேட்டபோது
A/L படிக்கிற அண்ணாக்கள் எங்களிடம் வந்து காசு கேட்பார்கள் அல்லது மாவா கேட்பார்கள் அல்லது புகையிலை சுண்ணாம்பு கேட்பார்கள் நாங்கள் இல்லை என்று சொன்னால் எங்களுக்கு அடி விழும் அடுத்தநாள் பாடசாலைக்கு வரும் போது ஏதாவது ஒன்றை கொண்டுவருமாறு கோபமாக கூறுவார்கள் மறுநாள் நாங்கள் இதில் ஏதோனும் ஒன்றையாவது கொண்டு செல்லவில்லை என்றால் அடி விழும் அப்படிதான் இரும்பு கொண்டு சென்ற மாணவனுக்கும் முதல் நாள் அடித்து விட்டு மறுநாள் காசு கொண்டு வரவேண்டும் என்று A/L ஆக்கள் சொல்லிவிட்டு போனார்கள். அந்த கோபத்தில்தான் அவன் இரும்பு கம்பி கொண்டு வந்தான் இன்று A/L ஆக்கள் வந்து காசு கொண்டு வரவில்லை என அடித்தால் அவர்களுக்கு திருப்பி அடிப்பன் இனி எங்களிடம் வந்து அவர்கள் எதுவும் கேட்க கூடாது என்பதற்காகவே இரும்புடன் வந்தான். என்றான்
ஆசிரியர்கள், வகுப்பு மாணவிகளுக்குத் தெரியுமா?
பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தெரியும் ஆனால் தெரியாத மாதிரி இருந்துவிடுவார்கள். எங்களின் சிலருக்கு வெளியில் உள்ள ரவுடிகளுடன் தொடர்புகள் இருக்கு. அதுவும் ஆசிரியர்களுக்கு தெரியும். பெரும்பலான ஆசிரியர்கள் வெளி மாட்டங்களிலிருந்து அல்லது தூர இடங்களிலிருந்து வந்து படிப்பிப்பிக்கின்றனர் அவர்கள் படிக்கின்ற மாணவர்களுக்கு படிப்பித்துவிட்டு சென்றுவிடுவார்கள்
நண்பர்களை காட்டிக்கொடுக்காத மாணவிகள்
எங்களோடு வகுப்பில் உள்ள மாணவிகள் அனைவருக்கும் தெரியும் வகுப்பில் பெரும்பாலான ஆண் மாணவர்கள் மாவா, கஞ்சா பாவிப்பது ஆனாலும் அவர்கள் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் ஒன்று நண்பர்களை காட்டிக்கொடுக்க கூடாது என்பதற்காகவும் மற்றது பயமும் காரணமாக இருக்கலாம்
பெற்றோர்களுக்கு தெரியுமா?
பெருமளவுக்கு நான் அறிந்த வகையில் வீடுகளில் இந்த விடயம் தெரியாது அப்படி தெரிய வந்தாலும் அது நான் அல்ல என்னுடைய நண்பன் நான் அவனுடன் சேர்ந்து இருப்பதனால் என்னையும் சொல்கின்றனர் எனக் கூறி சமாளித்துவிடுவம் அவ்வாறே நண்பர்களும் அவர்களது வீடுகளில் எங்களை கூறி அவர்கள் தப்பிவிடுவார்கள்.
ஏன் போதைப்பொருளை பாவிக்கின்றீர்கள்?
போதைப்பொருட்களை பாவிப்பதனால் அது உயிர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிடும் சில வருடங்களில் இயங்க முடியாதவர்களாக மாறிவிடுவம், சமூகத்தில் எங்களை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதெல்லாம் தெரியும்.
ஆனால் கஞ்சாவை பீடியில் வைத்து அடிச்சா மூளை சுறுசுறுப்பாக இயங்கும் நல்லா படிக்கலாம், எப்பொழுதும் சந்தோசமாக இருக்கலாம் என்று சொல்லிதான் முதலில் தருவார்கள் ஆனால் அது அப்படி இல்லை படிக்க முடியாது எதுவுமே செய்ய முடியாது, சாக போறம் என்ற உண்மையை அறியும் போது அதிலிருந்து மீள முடியாதவர்களாக இருப்பம்.
இலக்கு வைக்கப்படும் மாணவர்கள்
போதைப்பொருள் வியாபாரிகள் பெருமளவுக்கு மாணவர்களை இலக்கு வைத்தே தங்களது நடவடி;ககைகளை மேற்கொள்கின்றார்கள். மாணவர்களது டீன்ஏஜ் வயதில் அவர்களை இலகுவில் ஆசைகளை காட்டி வசப்படுத்த முடியும். ஓடுற பாம்பை மிதிக்கிற வயது என்பதனால் எதனையும் செய்து பார்க்க வேண்டும் என்ற அந்த வயதுக்கே உரித்தான இயல்பை போதைப்பொருள் வியாபாரிகள் தங்களது வியாபாரத்திற்கு சாதமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
மாணவர்களை பாவனையாளர்களாவும், எதிர்காலத்தில் அவர்களை முகவர்களாகவும் மாற்றிக்கொள்ளும் வகையில் மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டு போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுகிறது. ஒரு இனத்தின் இளம் சமூகம் வளைக்குள் குஞ்சு மீன்கள் தொகையாக மாட்டிக்கொள்வது போல் போதைப்பொருளுக்குள சிக்குண்டு அழிந்து போகின்றார்கள் என்பது மிக மிக ஆபத்தான நிலைமை.
போன பஸ்சுக்கு கை காட்டி பழக்கப்பட்ட நாம் இந்த விடயத்திலும் அப்படியே இருந்தால் எதிர்காலத்தில் பஸ்கள் வெறுமையாகவே பயணிக்கும்.