போட்டி நாளுக்கு நாள் வலுவாகி வந்தாலும் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் முந்துவதாக தகவல்

இங்கிலாந்தில் புதிய பிரதமருக்கான போட்டி நாளுக்கு நாள் வலுவாகி வந்தாலும், அதில் ரிஷி சுனக் முந்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது சொந்த கட்சிக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பு காரணமாக கடந்த 7-ந் தேதி பதவி விலகினார். அதேநேரம் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இந்த பதவியில் தொடருவார். பிரதமர்தான் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் என்பதால், கட்சி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

எனவே கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை (பிரதமர்) தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்க உள்ளன. போரிஸ் ஜான்சன் விலகலை தொடர்ந்து புதிய பிரதமர் பதவிக்கு பல்வேறு நபர்கள் களமிறங்குகின்றனர்.

குறிப்பாக போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் நிதி மந்திரியாக இருந்தவரும், இந்திய வம்சாவளி எம்.பி.யுமான ரிஷி சுனக், பதவி விலகிய பாகிஸ்தான் வம்சாவளி சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், போக்குவரத்து மந்திரி கிரான்ட் ஷாப்ஸ், முன்னாள் வெளியுறவு மந்திரி ஜெரிமி ஹண்ட் ஆகியோர் முக்கியமானவர்கள். மேலும் அட்டார்னி ஜெனரல் சுயல்லா பிரேவர்மென், ஈராக் வம்சாவளி நாதிம் சாகவி, நைஜீரிய வம்சாவளி கெமி பெடனாக், டாம் டுகெந்தாட் ஆகியோரும் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர். இந்த போட்டி கோதாவில் வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்டும் தற்போது இணைந்து உள்ளார். இதை நேற்று வீடியோ பதிவு மூலம் வெளியிட்டார்.

இப்படி அடுத்த பிரதமருக்கான போட்டி கோதாவில் 9 பேர் இருக்கும் நிலையில், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சும் விரைவில் தனது போட்டியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் போரிஸ் ஜான்சனுக்கு அடுத்ததாக இங்கிலாந்தை வழிநடத்துபவருக்கான தேர்தல் களம் நாளுக்கு நாள் விரிவடைந்து, போட்டி வலுவடைந்து வருகிறது. எனினும் இந்த போட்டியில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்தான் முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனான இந்த 42 வயது ரிஷி சுனக் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி உள்ளார். மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது, நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்வது, நாட்டின் மறுஒன்றிப்பு ஆகியவற்றை மேற்கொள்வேன் என அவர் உறுதியளித்து உள்ளார். அதேநேரம் தனது திட்டங்கள் குறித்து விரிவாக எதையும் அவர் இன்னும் அறிவிக்கவில்லை. மேலும் நிதி மந்திரியாக இருந்த அவர், உடனடி வரி குறைப்பு எதுவும் வாக்களிக்கவும் இல்லை.

பாரம்பரியமாகவே குறைவான வரிக்கு ஆதரவான கட்சியான கன்சர்வேடிவ் கட்சியில், வேட்பாளர்கள் கூறும் வரி குறைப்பு திட்ட வாக்குறுதி மீதுதான் அனைவரின் கவனமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பாகிஸ்தான் வம்சாவளி மந்திரி சாஜித் ஜாவித் பரவலான வரி குறைப்பு குறித்து வாக்குறுதி அளித்து உள்ளார். குறிப்பாக அடுத்த ஆண்டுக்கு திட்டமிடப்பட்டு உள்ள கார்பரேஷன் வரியை 19 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவதை ரத்து செய்து, அதற்கு பதிலாக படிப்படியாக ஆண்டுக்கு 1 முதல் 15 சதவீதமாக குறைக்கவும் உறுதியளித்து உள்ளார்.

இவ்வாறு இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டி சூடுபிடித்திருக்கும் நிலையில், இதற்கான தேர்தலுக்கான அறிவிப்பை கன்சர்வேட்டிவ் கட்சி அடுத்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்து, செப்டம்பர் மாத தொடக்கத்தில் புதிய கட்சி தலைவர் (பிரதமர்) யார்? என்பது தெரியவரும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்