பொலிஸ் திணைக்களத்தில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுங்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழு

அண்மையகாலங்களில் பொலிஸாரின் சில முறையற்ற நடத்தைகள் மக்களின்
நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதுடன் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டிற்கு
இருக்கின்ற நன்மதிப்பையும் இல்லாமல்செய்திருக்கின்றது என்று பொலிஸ்மா
அதிபரிடம் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,
பொலிஸ் திணைக்களத்தில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், நாட்டில்
சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கும் அவசியமான
நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றுக்கு மத்தியில் களுத்துறை சிரேஷ்ட பொலிஸ்
உத்தியோகத்தர் ஒருவர் பெண் பொலிஸார் இருவரை கழுத்தில் பிடித்துத்
தள்ளுகின்ற காணொளி சமூகவலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டதுடன்,
அப்பொலிஸ் அதிகாரியின் நடத்தை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும்
கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இச்சம்பவம் குறித்தும் அமைதிப்போராட்டத்தை சட்டவிரோதமான முறையில்
நிறுத்துவதற்கும், அதில் கலந்துகொண்டோரைக் கைதுசெய்வதற்கும் பொலிஸாரால்
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்தும் இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி அவ்விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு
முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு
அவசியமான சில விபரங்களை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னதாக
அனுப்பிவைக்குமாறுகோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னாள்
உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்க பொலிஸ்மா அதிபர்
சி.டி.விக்ரமரத்னவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்