பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா மீள ரகுராம்ராஜன் யோசனை!

கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே கதி கலங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் புதிய உச்சங்களை தொட்டுக்கொண்டே செல்வது, எங்கே இந்த பாதை போகிறது என்று தெரியாமல் ஒவ்வொருவரையும் விழி பிதுங்க வைத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத்தில் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.

இந்த சூழலில், அமெரிக்காவின் ‘பான் ஐஐடி’ சார்பில் இணையவழியில் ஒரு மாநாடு நடந்தது. ‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின் புதிய உலகளாவிய பொருளாதார நெறிமுறை’ என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில் பொருளாதார நிபுணரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான டாக்டர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றால், பொருளாதாரத்தில் மிக மோசமாக சேதம் அடைந்த நிறுவனங்கள் இருக்கும். கொரோனா வைரஸ் காலத்துக்கு பிந்தைய மீட்பு என்பது, பழுதுபார்க்கும் செயல்முறையுடன் இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் மிகப்பெரிய திவால்நிலைகள் நிச்சயமாக இருக்கக்கூடும். ஐரோப்பாவிலும் இது நடக்கும். நாம் பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டும். வளங்களை மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மூலதன வடிவமைப்புகளை மறு சீரமைக்க வேண்டும். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடி வருகின்றன. தற்போது முக்கிய பிரச்சினை, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதுதான். துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரஸ் பரவல் என்பது கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருக்கிற வகையில் குறிப்பிடத்தகுந்ததாகி இருக்கிறது.

இந்த வைரஸ் தொற்று, மிகப்பெரிய அளவில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி உள்ளது.

இனியும் புதிதாக ஊரடங்கு போடப்படுமா, அது எத்தனை கடினமான ஒன்றாக இருக்கப்போகிறது என்று தொழில், வர்த்தக துறையினருக்கு தெரியாது. அமெரிக்காவை பொறுத்தமட்டில் சில மாகாணங்களில் புதிதாக ஊரடங்கு போடுவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் சில மாநிலங்களில் ஊரடங்கு பற்றி பேசப்படுகிறது. உண்மையில் சிலவற்றில் சில வகையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

வளர்ந்த நாடுகளில் 45-50 சதவீதத்தினர் வீடுகளில் இருந்து வேலை பார்க்க முடியும். எனவே இந்த நாடுகள், ஊரடங்குக்கு மத்தியிலும் செயல்பட இயலும். ஆனால், ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், புதிதாக தோன்றி வருகிற சந்தைகள் போன்றவற்றில் வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது குறைவாகவே இருக்கிறது.

ஊரடங்குகளால் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் பலரும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். பொருளாதார முன்னேற்றத்தைப் பொறுத்தமட்டில், நாம் பல ஆண்டுகளை இழந்திருக்கிறோம்.

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரிக்கும். இதனால் உலகளாவிய வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும். இதைப்பயன்படுத்தி, இந்தியா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகள் முன்னோக்கி நடைபோடுவது முக்கியம்.

கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த நாடுகள் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுகிற நிலையில், அமெரிக்க, சீன மோதலால் ஏற்படுகிற உலகளாவிய வர்த்தக பாதிப்பை பயன்படுத்தி நெருக்கடியில் இருந்து மீண்டு வெளியே வரவேண்டும்.

இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.

முகநூலில் நாம்