பொருளாதார நெருக்கடி – தீர்வு நம் கையில்

–         கருணாகரன்

நாட்டின் பொருளாதார நெருக்கடி வரவரக் கூடுமே தவிர, இப்போதைக்குத் தீராது என்பது மிகத் தெளிவாகியுள்ளது. இதைப்பற்றிய அக்கறை எவரிடத்திலும் சீரியஸாகக் காணப்படவில்லை. இது ஒரு பெருந்துயர நிலையே. ஆனால் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும். தீர்க்க முடியும் என்று சொல்வதை விடத் தீர்க்க வேண்டும். அப்போதுதான் பல பிரச்சினைகள் குறையும். நாடு மீளும். இல்லையென்றால் பிரச்சினைகள் பெருகும். நாடு மேலும் மேலும் நெருக்கடிக்குள் சிக்குண்டு அந்நிய சக்திகளின் கைகளில் சிக்கி, காலில் மிதிபடும்.

இது ஒரு அபாய எச்சரிக்கையே.

முதலில் பொருளாதார நெருக்கடி கூடுமே தவிர, இப்போதைக்குத் தீராது என்பதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.

1.    பொருளாதார நெருக்கடியின் தீவிரத் தன்மையைக் குறித்த உணர்வு இன்னும் அரசாங்கத்துக்கும் ஏற்படவில்லை. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், தலைமைகளுக்கும் ஏற்படவில்லை. அரசாங்கம்தான் செயலற்றுப்போய் விட்டது. அதனால் சரியான – பொருத்தமான எந்தத் திட்டத்தையும் தயாரித்ததாக இதுவரையில் தகவலில்லை. சரி இதைப்பற்றி மறுதரப்பான எதிர்க்கட்சியினரிடம் கேட்டால் நாங்கள் பொருளாதார நிபுணர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நிபுணர்களுடன் தொடர்புண்டு என்று சொல்கிறார்களே தவிர, என்ன பேசுகிறார்கள்? எப்போது மாற்றுத்திட்டம், மாற்றுப் பொறிமுறையைப் பற்றி தகவல் தருவார்கள் என்று தெரியவேயில்லை. ஆக எதிர்த்தரப்பும் உருப்படியாக இல்லை. இதனால்தான் இவை மையப்பிரச்சினையைப் பற்றி (பொருளாதார நெருக்கடியைப் பற்றி) சிந்திக்காமல் தமக்கிடையிலான அதிகாரப் போட்டியில், அதற்கான தந்திரங்களில் ஈடுபடுகின்றன என்று உறுதியாகக் கூற முடிகிறது. இதேவேளை மக்களுக்கும் இதைப் பற்றிச் சரியாகப் புரியவில்லை. அதைச் செய்ய வேண்டிய ஊடகங்கள், புத்திஜீவிகள் போன்ற தரப்பினரும் அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல் ஏனோ தானோ என்று இருக்கின்றனர்.

2. இனப்பிரச்சினை உள்ளிட்ட எந்தத் தேசியப் பிரச்சினைக்கும் தீர்வைக் காணாமல் அவற்றைப் பற்றிப் பேசிப் பேசியே காலத்தைக் கடத்தியதைப்போல இந்தப் பிரச்சினையையும் பேசிக் கடத்தி விடலாம். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டித் தப்பி விடலாம் என்றே பலரும் கருகிறார்கள். இதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. முன்னையை பழக்கதோசத்திலிருந்து விடபட முடியாமல், விடுபட விரும்பாமல்தான் எல்லோரும் உள்ளனர். மக்களுக்கும் இது பழக்கப்பட்டுப் போன சங்கதியாகி விட்டது. ஆனால், இந்தப் பிரச்சினை அவ்வாறானதல்ல. இது பசி, பிணி என ஒவ்வொருவரின் உடலோடும் உயிரோடும் சம்மந்தப்பட்டது. மேலும் கல்வி, மருத்துவம் என்று வாழ்க்கையின் அடிப்படைகளில் நேரடியாகவே தாக்கத்தை உண்டாக்குவது. நிகழ்காலம், எதிர்காலம் என இரண்டிலும் உச்சப் பாதிப்பை ஏற்படுத்துவது. மட்டுமல்ல, நாடே இயங்க முடியாத நிலையை உருவாக்கக் கூடியது.

3.    அரசியல் உறுதிப்பாடு இல்லாத நிலை இருக்கும் வரையில் எந்தவிதமான பொருளாதாரத் திட்டங்களையும் மேற்கொள்ள முடியாது. இந்த நிலை தொடர்ந்தால் நாட்டில் குழப்பங்களும் ஸ்திரமற்ற நிலைமையுமே நீடிக்கும். எத்தகைய கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்க முடியாது. இதனால்தான் அரசியல் உறுதிப்பாடு அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. அது நிகழவில்லையென்றால் பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்ய முடியாது என்று உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை வெளிப்படையாகவே சொல்கின்றன. இதே நிலைப்பாட்டையே அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன், அவுஸ்திரேலியா, யப்பான் போன்ற உதவும் நாடுகளும் கொண்டுள்ளன. எல்லாமே ஒன்றின் பிரதிபலிப்பான்கள்தானே. மட்டுமல்ல இலங்கையில் மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள் பெரும் சவாலுக்குரியதாகி விட்டது. அதைச் சீராக்காத வரையில் பிற நாடுகளினதும் அமைப்புகளின் நம்பிக்கையைப் பெற முடியாது. ஆகவே அதைக்குறித்த சிந்தனையும் உடனடி நடவடிக்கையும் அவசியம்.

4.    இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் நேர்மையாகக் கண்டறியப்பட வேண்டும். யுத்தம், முறையற்ற பொருளாதாரத் திட்டங்கள், அவற்றை மேற்கொண்ட தரப்பினர், ஊழல், அதைச் செய்தவர்கள், அதற்கு எதிரான நடவடிக்கை மற்றும் அதைக் கட்டுப்படுத்தல் என்பவற்றைப் பற்றியெல்லாம் பகிரங்கமாக விவாதித்து உரிய முறையில் இனங்காணல் செய்ய வேண்டும். உரிய தரப்புகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும். இவ்வளவுக்கும் கடந்த 40 ஆண்டுகளாக அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களே இப்பொழும் அதிகாரத்தில் உள்ளனர். எனவே இவர்கள்தான் பொறுப்பாளிகள். ஆகவே இவர்கள் இதற்கான பொறுப்பேற்றலைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாத வரையில் எதுவும் நிகழாது.

5.    பொருளாதார நெருக்கடி நாட்டுக்கும் மக்களுக்கும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? ஆகவே அதிலிருந்து மீள்வது எப்படி? இதற்கு அரசின் பொறுப்பென்ன? மக்களின் கடமைகள் என்ன? உண்மையான மாற்றுத்திட்டங்கள் என்ன? தீர்வு என்ன? அவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது? என்பதைக் குறித்த ஆய்வுகள், உரையாடல்கள் அவசியமானது. இது தொடக்க நிலைப்பணியாகும். இதுவே இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அதாவது இதையே இன்னும் யாரும் ஆரம்பிக்கவில்லை. அரசும் செய்யவில்லை. மக்கள் தரப்பிலுள்ள அமைப்புகள், ஊடகங்கள், புத்திஜீவிகள், பொருளாதாரத் துறையினர் என யாருமே செய்யவில்லை. என்றால், இந்த நெருக்கடியின் தீவிரத்தை யாரும் சரியாக உணரவில்லை என்றுதானே அர்த்தம்!

இதில் முக்கியமாகப் பங்களிக்க வேண்டிய தரப்புகள்  பொருளாதாரத்துறை சார்ந்த நிபுணர்கள், உற்பத்தி மற்றும் தொழில்துறையினர், முதலீட்டாளர்கள், ஊடகங்கள் ஆகும். ஆனால் கவலையளிக்கும் விதமாக இந்தத் தரப்புகள் இதற்கு வெகு தொலைவில் ஏனோ தானோ என விலகி நிற்கின்றன. அல்லது கனத்த மௌனம் காக்கின்றன. இது மிக மோசமான நிலையாகும். உண்மையில் இந்த நெருக்கடியில் இவை இரண்டு வகையான பங்களிப்புகளை – வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்க வேண்டும். ஒன்று, நிலைமையின் – நெருக்கடியின் – தீவிரத்தை, அதன் ஆபத்தை வெளிப்படுத்த வேண்டும். இப்போது கூட அதைச் செய்யலாம். மேலும் தாமதிக்கக் கூடாது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நெருக்கடி பல மடங்கு அதிகரித்துச் செல்லும். உதாரணமாக இந்தப் பொருளாதார நெருக்கடி வெளிப்படையாகத் தெரியத் தொடங்கி இப்பொழுது ஓராண்டாகிறது. இந்த ஓராண்டுக்குள் இது எவ்வளவு விரைவான சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்று பார்த்தீர்களா? இந்தவாரத் தொகை மதிப்பீட்டின்படி தற்போதைய பணவீக்கம் 60 % த்தைக் கடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றுமே இல்லாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலையே அதிகரித்துள்ளது. அடுத்த கட்டமாக உணவுப் பொருட்களே இல்லாத நிலை ஏற்படப்போகிறது. ஆகவே, முதலில் அங்கங்கே தனித்தனி ஆளாக ஒற்றைக் குரலாக ஒலிக்காமல் அமைப்பாகத் திரண்டு, இதை ஆக்கபூர்வமான முறையில் அரசுக்கும் மக்களுக்கும் விளக்க வேண்டும். இதை எழுந்தமானமாகச் செய்யாமல் முறைப்படியான தரவுகள், விளங்கங்களோடு ஆய்வு ரீதியாக, மதிப்பிடலுக்குள்ளாக்கி வெளிப்படுத்த வேண்டும். இதை மக்களிடத்தில் கொண்டு கொண்டு போவதற்கும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கும் ஏற்ற வகையிலான வழிமுறைகளில் செயற்பட வேண்டும். அரசுடன் சந்திப்புகளை மேற்கொண்டு திரட்டிய ஆவணத்தை கையளித்து உரையாடுவது அவசியம். இணைந்து திட்டங்களை உருவாக்கவும் அவற்றைச் செயற்படுத்தவும் வேண்டும். அதைப்போல, மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு கலந்துரையாடல்கள், ஊடகங்கள் வழியான எடுத்துரைப்புகள், பகிர்தல்கள், மக்கள் சந்திப்புகள் என நிகழ வேண்டும். இதற்கு அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு  செலவிடப்படுவது கட்டாயம். ஏனென்றால் இதொரு தேசிய நெருக்கடியாகும். எந்தத் தேசிய நெருக்கடியும் கனதியுடையதாகவே இருக்கும். இதனால்தான் இத்தகைய நெருக்கடிகளின்பொழுது செயற்படுவதை இடர்காலப் பணி, அவசரகாலப் பணி, அவசியப் பணி என்ற உணர்வோடு செய்ய வேண்டும். அதுவும் உயிரையும் உடலையும் பாதிக்கின்ற நெருக்கடி இதுவல்லவா. ஆகவே இதனுடைய தாற்பரியத்தைப் புரிந்து கொண்டு செயற்படுவது அவசியம். இரண்டாவது, துரிதமாக மாற்றுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காகப் பங்களிப்பது, உழைப்பதாகும். இது தனியே அரசுடன் அல்லது அதன் நிர்வாகக் கட்டமைப்புடன் மட்டுமல்லாது, மக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். களப்பணி என்ற அடிப்படையிலேயே இதைச் சிந்திப்பது நல்லது.

6.    அரசாங்கத்தின் திட்டங்களும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான அரச நிர்வாகமும் முற்று முழுதாக மறுசீரமைப்புக்குள்ளாக்கப்படுவது அவசியம். இதற்கான சுற்று நிருபங்கள், சட்டங்களும் சீரமைப்புக்குள்ளாக வேண்டும். இடர்கால நிலைமையைக் கருத்திற் கொண்டு அனைவரும் குறிப்பிட்ட காலத்துக்கு சிறப்பு வேலைத்திட்டத்துக்குத் தயார்ப்படுத்தப்படுவது அவசியம். இதன்படி அனைவரும் களப்பணியாளராக – உற்பத்தித்துறைகளின் மேம்பாட்டுக்கும் பொருளாதார விருத்திக்கும் பங்களிப்புச் செய்ய வேண்டும். பணியாற்ற வேண்டும். இதில் கூடுதலாகப் பங்களிப்போருக்கு – சிறப்பாக வேலை செய்வோருக்கு ஊக்குவிப்புகள் வழங்கப்படலாம். பதவி உயர்வு, கொடுப்பனவு மற்றும் சிறப்பு வழங்கல்கள் என்றவாறாக. குறைவாகப் பங்களிப்போர் அல்லது ஒத்துழைக்க மறுப்போருக்கான இடத்தை நிராகரித்தல், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் என்பதாகவும். இவ்வாறே அரசாங்கத்திலும் அதிக வருவாயை ஈட்டித்தரும் அமைச்சுகள், மக்கள் நலனை மேம்படுத்தும் அமைச்சுகள், உற்பத்தியில் சிறப்பாகச் செயற்படும் அமைச்சுகள் என வகைப்படுத்தப்பட்டு அவற்றுக்கான சிறப்புத் திட்டங்களும் மதிப்பளித்தல்களும் வழங்கப்படுவது அவசியம். ஆனால் இந்தத் தரப்பிலும் இவற்றைக் குறித்து எத்தகைய கரிசனைகளும் இல்லாமலே உள்ளது.

7.    மக்கள் இன்றைய நிலையை முற்று முழுதாக விளங்கிக் கொள்ள முற்பட வேண்டும். இது பல வகையில் அமையும். ஒன்று செலவீனங்களை மட்டுப்படுத்துவது. விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும். நாளாந்த வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது. அதாவது ஒவ்வொருவரும் சுயமாக இயங்கக் கூடியவாறாக. பிள்ளைகள் தாமாகப் பாடசாலை செல்வது வரையில். எரிபொருள் நெருக்கடிக்கு மாற்றாக சைக்கிள்களை அதிகமாகப் பயன்படுத்த விளைய வேண்டும். எரிபொருளுக்காக செலவழிக்கப்படும் பணத்தை விட (அதன் விலை உயர்வை விட) அதைப் பெறுவதற்காக செலவிடப்படும் நேரம் அதிகம். அதன் பெறுமதி நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கிறது. ஆகவே இதைக்குறித்துப் பொறுப்புடன் மக்கள் சிந்திப்பது அவசியம். அதைப்போல குடும்பத்தில் உள்ள அனைவரும் கட்டாயமாக உழைக்க வேண்டும் என்பது. குறிப்பிட்ட நேரமாவது இதில் அடங்கும். உடல், உள வலுவுடையோர் குறைந்தது 12 மணி நேரமாவது வேலை செய்யவேண்டும். இதை ஒரு சட்டம்போல ஒவ்வொருவரும் உணருவது அவசியம்.

8.    எத்தகைய அடிப்படையில் மக்கள் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முடியும் என்று வழி காட்டப்படுவது அவசியம். காட்டப்படும் வழிகளில் மக்கள் பங்களிப்புகள் நடக்க வேண்டும். இதை ஊக்கப்படுத்துவது, மேலும் வளப்படுத்துவது, பரவலாக்கம் செய்வது என இது அமைதல் அவசியம்.

இப்படிப் பலவற்றை நாம் அவசர அவசியமாகச் செய்ய வேண்டியுள்ளது. இதை விடவும் மாற்றத் திட்டங்கள், தீர்வுகள் பலரிடம், பலவிதமாக இருக்கலாம். வழிகளும் பல இருக்கலாம். அதில் நாம் செய்யும் பயணம் எப்படி என்பதுதான் முக்கியமானது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்