பொது விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மிக பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் 3 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடந்த பொது விழாவில் கலந்து கொண்டார். பரமஹம்சயோகானந்தர் எழுதிய கிரியா யோகா பற்றிய பயிற்சி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- என்னை பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள் இது பாராட்டா, திட்டா என எனக்கு தெரியவில்லை. அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனசு அறிவுடைய தயாரிப்புதான். அதுவே மூலாதாரம். மனசு, அறிவு, சக்தி இவை செயல்பட ஒரு சக்தி வேண்டும் அதுதான் உயிர். அதை ஆத்மா, ஜீவாத்மா என்கின்றனர்.

ஒரு குரங்குக்கு இளநீர் ஓட்டுக்குள் தேங்காய் இருப்பது தெரிந்து அதை எடுப்பதற்கு கையை குறுகலாக வைத்து உள்ளே விடும். உள்ளே கையில் தேங்காயை எடுத்தவுடன் கை குவிந்து விடும்; இதனால் கையை வெளியே எடுக்க முடியாமல் திண்டாடும். இழுத்து இழுத்துப் பார்த்து சோர்ந்து போய் தேங்காயை போட்டவுடன் கை வெளியே வந்து விடும். இதுபோல்தான் சம்சார வாழ்க்கை என்பது அதை விட்டால்தான் சன்னியாசம் கிடைக்கும்.

மனிதனுக்கு மனசு எப்போதும் நிகழ்காலத்திலேயே இருக்காது, ஒண்ணு கடந்த காலத்தில் இருக்கும். அப்படியும் நல்ல நினைவுகளாக இருக்காது. யார் நமக்கு கெடுதல் பண்ணினா? யார் நமக்கு ஆப்பு வெச்சா? என்று யோசிக்கும். அல்லது எதிர்காலத்தில் இருக்கும் நாம் அவனைப்போல் ஆகிவிடுவோமோ? அவன் போல் நமக்கு நோய் வந்து விடுமோ? என்று யோசித்துக் கவலைப்படும். நிகழ்காலத்திலேயே இருக்காது.

ஆனால் குழந்தைகள் எல்லோருடனும் கனெக்ட் ஆவார்கள். அவர்கள்தான் நிகழ்காலத்தில் இருப்பார்கள். கவலை நம்முடைய எல்லா பலத்தையும் எடுத்துவிடும். ஒரு நாட்டில் ஒரு பட்டத்து யானை இருந்தது. மிகவும் ஆக்ரோ ஷமான யானை அது. பாகனை தவிர வேறு யாருக்கும் அது கட்டுப்படாது. ஒரு நாள் ஒரு சிறுவன் வந்து கையை காட்டியவுடன் நின்று விட்டது. இப்படியே பல நாட்கள் நடக்கிறது. இது மன்னரின் காதுகளுக்குப் போகிறது. அவர் மந்திரியிடம் கேட்கிறார். அவர் அந்த சிறுவனின் வீட்டுக்குச் சென்று அவன் அம்மாவிடம் கொஞ்ச நாட்களுக்கு சிறுவனுக்கு உப்பு இல்லாமல் சோறு போடுங்கள் என்று சொல்கிறார்.

அதே போல் செய்கிறார் அவர். சிறுவன் கேட்டபோது நமக்கு உப்பு கிடைக்காது. வேலைக்குப் போனால்தான் கிடைக்கும் என்கிறார். சிறுவனுக்கு உப்பு கிடைக்கவில்லையே என்று கவலை. ஒரு நாள் பட்டத்து யானையை நிறுத்த முயற்சிக்கிறான். அந்த யானை அவனை தூக்கி வீசி விட்டது. உப்பு கிடைக்காத மனம் கவலையில் ஆழ்ந்து விட்டதால் தான் யானை தாக்கியது.

இந்த உலகத்தை விட்டு செல்லும்போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதைவிட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். நோயாளியாக நாம் இருந்தால் பிறருக்கு கஷ்டங்கள் ஏற்படலாம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். இல்லையென்றால் சந்தோஷமாக மருத்துவமனை செல்லாமலேயே ஆரோக்கியமாக நடமாடி கொண்டிருக்கும்போது போய் சேர்ந்துவிட வேண்டும். நான்கூட இரண்டு முறை மருத்துவமனை போயிட்டு வந்தவன்தான்.

நான் யார் எங்கிருந்து வந்தவன், சாதி என எல்லாம் சேர்ந்ததுதான் அறிவு, பணம், புகழ், பெயர் உச்சி. பெரிய பெரிய அரசியல்வாதிகளை பார்த்தவன் நான். ஆனால் சந்தோஷம் நிம்மதி என்பது 10 சதவீதம்கூட இல்லை. எல்லாம் மாயை. மாயை என்பது என்ன? எது இல்லாததோ அது இல்லாமல் வந்து மறைந்து விடும். அது போல்தான் பெயர், புகழ் எல்லாமும். இந்த உடம்பு எப்படியிருந்தது?

குழந்தை, மனிதன் வயதாவனவன். பிறகு டெட்பாடி என்று மாறிவிட்டது. ஆனால் இங்கிருக்கும் சன்னியாசிகளைப் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுடன் பாபாஜி, ரிஷிகள், ஜீசஸ் என்று எல்லோரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நிம்மதி என்பது தற்காலிகமானது. இது ஆயிரம் அம்பானி, ஆயிரம் அதானி இருப்பது போல. எல்லோரும் கிரியா பயிற்சி செய்யுங்கள். எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது கிரியாதான். படப்பிடிப்பு முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு கிரியா பயிற்சி செய்வேன். இதை நீங்களும் பழக வேண்டும். சுவாமிஜி இதனை தமிழில் தந்துள்ளார்கள். இதனை பயின்று ஆரோக்கியமாக வாழுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்