பொது மக்கள் இரண்டு சுமைகளை சுமப்பதாக சஜித் தெரிவிப்பு

மக்கள் தங்கள் சொந்த சுமைகளையும், நாட்டை அழிக்கும் அரசியல்வாதிகளின் சுமைகள் என இரு சுமைகளையும் சுமக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (23) தெரிவித்தார்.

மக்களின் துன்பங்களை புரிந்து கொள்ளாத அரசாங்கம் மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ஆட்சியை நடத்தும் நபர்களுக்கு மக்கள் படும் துன்பங்கள் குறித்து எந்தப் பொறுப்பும் அற்றவர்கள் போலவே செயற்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீ சம்புத்த சாசனம் நிலைபெற மகத்தான பங்களிப்பைச் செய்த மறைந்த மக்கள் சார் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 98 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு “தர்மத்திற்கு உதயம் குளமும் வயலும் கிராமமும் விகாரையும்” வேலைத்திட்டத்தின் பிரகாரம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு 11 ஆவது தாது கோபுரமாக காலி, ஹினிதும,நாகொட முலன ஸ்ரீ ஆனந்தராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட “சந்தவிமல நாஹிமி நினைவு விகாரை” சாசனத்திற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நேற்று (23) இடம் பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சங்கைக்குரிய மகா சங்கத்தினர், மக்கள் பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தி இலக்குகளை அடையும் ஒரு வேலைத்திட்டத்தையே கொண்டுள்ளதாகவும், அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்ப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திடமிருந்து மக்கள் தீர்வுகளை எதிர்பார்க்கிறார்களேயன்றி, தீர்க்க முடியாத குறைகளை அல்ல எனவும், இருந்தபோதிலும், இரண்டு வருட ஆட்சியின் கீழ் மக்கள் அரசியல் நாடகங்களை மட்டுமே மரபுரிமையாக பெற்றுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் இரு முனைகளிலும் எரியும் தீபம் போல இரண்டு யுத்தங்கள் நடந்த நாட்டையே பொறுப்பேற்ற ரணசிங்க பிரேமதாஸ , அத்தகைய காலத்திலும் இயலாமை, முடியாமை பற்றி பேசாமல் செயற்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

செயற்ப்பட இயலாமை குறித்து குறை கூறாத பிரேமதாஸ, மாறாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை காட்டினார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், முழு நாடும் இன்னல்களில் மூழ்கிய நிலையில் இருந்தாலும், பொது மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த போதிலும், குளிரூட்டி இயந்திரங்களை வைத்துக் கொண்டு யோகா செய்து கொண்டிருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த அரசாங்கம் மக்கள் படும் துன்பங்களை மூடி மறைத்தேனும் தமது இருப்பை பலப்படுத்தவே முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்