பொதுத் தேர்தல் திகதி; மனுக்களை விசாரிப்பது குறித்த தீர்மானம் இன்று

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நாடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் உயர்நீதிமன்றம் இன்று (02) தீர்ப்பளிக்கவுள்ளது.

இன்று மாலை 3 மணிக்கு உயர்நீதிமன்றம் கூடி இதற்கான தீர்ப்பை அறிவிக்கவுள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட வர்த்தமானி ஆகியவற்றை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் கடந்த 10 நாட்கள் பரிசீலனைகள் இடம்பெற்றன.

இதனையடுத்து, குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று (01) மாலை நிறைவடைந்தன.

அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா ? என்பது தொடர்பில் அதிக நாட்கள் ஆராயப்பட்ட மனுக்களாக இந்த விவகாரம் அமைந்துள்ளது.

மனுதாரர்கள் அனைவரும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்பதனால் இதன் மூலம் அரசாங்கத்தை சிரமத்திற்கு உள்ளாக்கும் நோக்கம் உள்ளதாக பிரதவாதிகள் சார்பில் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த வழக்கு அரசியலுடன் தொடர்புபட்ட விடயம் என்றபோதிலும் வழக்கிலுள்ள சட்ட ரீதியான விடயங்கள் தொடர்பிலே தாம் வாதிடுவதாக மனுதாரர்கள் சார்பில் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

முகநூலில் நாம்