
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் முதன்மையானவர்கள் அஜித் மற்றும் விஜய். கடந்த இருபது வருடங்களாக அஜித் மற்றும் விஜய் இடையே கடுமையான போட்டி நடந்து வருகின்றது. நாளுக்கு நாள் இவர்களது போட்டி அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது.
என்னதான் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இவர்களது ரசிகர்கள் அஜித் மற்றும் விஜய்யை போட்டி நடிகர்களாகவே பாவித்து வருகின்றனர். தற்போது வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் மோதவுள்ளன.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜில்லா மற்றும் வீரம் படங்களுக்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளன. இந்நிலையில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்க உதயநிதி விநியோகம் செய்கின்றார்.
அதே சமயத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்க லலித் தமிழ் நாட்டு முழுவதும் வெளியிடுகிறார். இதைத்தொடர்ந்து இரு படங்களுக்கும் சமமான திரையரங்கங்கள் ஒதுக்கப்படும் என உதயநிதி கூறியுள்ள நிலையில் தற்போது வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு தங்கள் படத்திற்கு சமமான திரையரங்கங்கள் கிடைக்கவில்லை என்பது போல பேசியுள்ளார்.
மேலும் இதைப்பற்றி பேச்சுவார்த்தை நடத்த உதயநிதியை சந்திக்கபோவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் தில் ராஜு விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஸ்டார், எனவே அவர் படங்களுக்கு அதிக திரையரங்கங்கள் கிடைக்கவேண்டும் என சொன்னது அஜித் ரசிகர்களை சீண்டியுள்ளது.
அஜித் மற்றும் விஜய் இருவரும் சமபலத்துடன் இருக்கையில் தில் ராஜு எப்படி விஜய் தான் நம்பர் ஒன் என சொல்லலாம் என்று அஜித் ரசிகர்கள் தில் ராஜூவை விமர்சித்து வருகின்றனர். தற்போது இந்த மோதல் சமூகத்தளங்களில் மேலும் முற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.