
உலக உணவுத் திட்டத்தின் கீழ், அனைத்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற பெருந்தோட்ட சமூகத்தினருக்கும் ஒக்டோபர் மாதம் முதல் விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை மையப்படுத்தி ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நகர்புறங்களை அண்மித்த தோட்ட மக்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டம் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான அமைச்சர்கள் குழு நேற்று முதல் முறையாக பாராளுமன்றத்தில் கூடியபோதே, இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பான், கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சகல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், நகரங்களிலுள்ள தோட்ட சமூகத்தினருக்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட கொடுப்பனவு வழங்கப்படவிருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்தார்.
பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
சகல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், நகரங்களிலுள்ள தோட்ட சமூகத்தினருக்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட கொடுப்பனவு வழங்கப்பட இருக்கின்றது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நகரப் புறங்களில் உள்ள தோட்ட சமூகத்தினருக்கு இதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் தற்பொழுது காணப்படும் நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பான், கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு அதிக தொழிலாளர்களை அனுப்புவதை ஒழுங்குமுறைப்படுத்த தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று ஜப்பான் போன்ற நாடுகளுக்குத் தொழிலாளர்களை அனுப்புவதாகத் தெரிவித்து வகுப்புகளை நடத்தும் மோசடிக்காரர்கள் இருப்பதால் பொதுமக்கள் சரியானதைத் தேடிப்பெற்றுக் கொண்டு செயற்படவேண்டும் என்றார்.
அத்துடன் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலம் இரண்டு மற்றும் வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் என்பனவும் இங்கு கருத்தில் கொள்ளப்பட்டதுடன் அவற்றுக்கான அனுமதியும் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரட்ன, வடிவேல் சுரேஷ், டி.பிஹேரத், வேலுகுமார், அரவிந்த குமார் உள்ளிட்டவர்களும், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.