பெண்ணியவாதியாக மாற்றிய சம்பவம் குறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

‘யூ டர்ன்’ என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’, ‘காற்று வெளியிடை’, ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘மாறா’ மற்றும் ‘சக்ரா’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவரும் ஷ்ரத்தா, பொது முடக்கம் காரணமாகத் தற்போது வீட்டிலேயே இருக்கிறார். இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

ஷ்ரத்தா தனது பதிவில், ‘எனக்கு 14 வயது இருக்கும்போது குடும்பத்தினருடன் ஒரு பூஜையில் கலந்து கொண்டேன். அப்போது எதிர்பாராமல் எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. அம்மா அங்கு என்னுடன் வரவில்லை. அதனால் அருகில் இருக்கும் என் உறவினரிடம் அது குறித்து கூறினேன்.

எனது கையில் சானிட்டரி பேட் எதுவும் இல்லை என்பதால் மிகுந்த வருத்தத்துடன் அமர்ந்திருந்தேன். என் பக்கத்தில் இருந்த வேறொரு பெண் நான் பேசியதை ஒட்டுக் கேட்டுவிட்டு நான் வருத்தமாக இருப்பதைப் பார்த்து, “பரவாயில்லை குழந்தை, கடவுள் உன்னை மன்னித்து விடுவார்” என்று கூறினார்.

மாதவிடாய் நேரத்தில் பூஜையில் கலந்துகொண்டதற்காகத் தான் அவர் இவ்வாறு கூறினார். அந்த நாள் எனது 14 வயதில் நான் பெண்ணியவாதியாக மாறிவிட்டதுடன் மற்றும் கடவுள் நம்பிக்கையும் இழந்து விட்டேன்” என்று ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

முகநூலில் நாம்