பெண்கள் டி20 உலக கோப்பை: தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 98 ரன்னில் வெற்றி

பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் கேப்டன் ஹீதர் நைட் சதம் அடிக்க தாய்லாந்தை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து – தாய்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் எமி ஜோன்ஸ், டேனி வியாட் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர்.

இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள். இதனால் 7 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஸ்கிவர் உடன் கேப்டன் ஹீதர் நைட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஹீதர் நைட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 66 பந்தில் 108 ரன்களும், ஸ்கிவர் 52 பந்தில் 59 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தாய்லாந்து களம் இறங்கியது. தாய்லாந்து அணி ரன்கள் குவிக்க தவறினாலும் ஆல்அவுட் ஆகவில்லை. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இங்கிலாந்து 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முகநூலில் நாம்