
புரேவி புயலால் வரும் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான முன்னாய்த்த
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதிப் பணிப்பாளர் சரவணபவன்
புரேவி புயல் மற்றும் கன மழை காரணமாக ஏற்படும் பாதிப்புக்களை
எதிர்கொள்வதற்கான முன்னாய்த்த நடவடிக்கைகள் சுகாதார துறையினரால்
மேற்கொள்ளப்பட்டுள்ளன என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்
பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் அந்தந்த
பிரதேசங்களில் சுகாதார துறையினரால் சில முன்னாய்த்த நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன.முக்கியமாக கொவிட் 19 சந்தேகத்தில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் புயல் மற்றும் வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்டு இடம்பெயரும் போது அவர்களை பிரத்தியோகமாக தங்க
வைப்பதற்கு அந்தந்த சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவில் சில பாடசாலைகளை
ஒதுக்கியிருக்கின்றோம்,
மேலும் 38 வாரங்கள் ( ஒன்பது மாததிற்கு) அல்லது அதற்கு மேற்பட்ட
கர்ப்பகாலம் உள்ள கர்பவதிகள்,மாற்றுத்திறனாளிகள், முள்ளந்தண்டு வடம்
பாதிக்கப்பட்டோர் போன்றோர் தங்களின் பகுதிகளில் வெள்ளம்,புயல் காரணமாக
போக்குவரத்து துண்டிக்கப்படும் எனக் கருதினால் அருகில் வைத்தியசாலைகளில்
சென்று தங்கியிருக்க முடியும் காலநிலை சீராகும் வரை தங்கியிருக்க
முடியும். எனத் தெரிவித்த வைத்தியர் சரவணபவன்
சீரற்ற காலநிலையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு சுகாதார துறையினரின்
உதவிகள் தேவைப்படுவோர் அந்தந்த பிரதேசங்களில் உள்ள பொதுச் சுகாதார
பரிசோதகர்கள், குடும்ப நல மருத்துவர்கள், ஆகியோருடன் தொடா்பு கொண்டு அவசர
உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார
சேவைகள் பிரதிப் பணிப்பாளர் சரவணபவன் தெரிவித்துள்ளார்