புதுக்குடியிருப்பு பிரதேச பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இருந்து அத்தியாவசிய நோக்கத்திற்காக பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த மிகக்குறைந்த அளவிலான எரிபொருட்களை எடுத்து பொலிஸாரும் சில பிரதேச இளையோரும்  கஞ்சா அல்லது போதை வஸ்த்துக்களை பிடித்தது போன்று செய்திகளை வெளியிட்டும் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது தேவையற்ற விடயம் மட்டுமல்லாது எமது பிரதேச செயலகத்தினையும், உத்தியோகத்தர்களையும் திட்டமிட்டு அவமானப்படுத்தும் செயலாகவே காணப்படுவதாக தெரிவித்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலக ஊழியர்கள் 01 ஆம் திகதி திங்கட்கிழமை சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரதேச செயலக ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில் ,

இப் பொருளாதார நெருக்கடி மிகுந்த இக்காலத்தில் மின்வெட்டு நேரம் அதிகமாக காணப்படுவதால் மின்பிறப்பாக்கியின் தேவைக்காக குறித்த 50 லீற்றர் டீசலினை முன்னேற்பாடாக கொள்வனவு செய்து வைத்திருத்தல் பாரிய குற்றமில்லை.

களஞ்சிய அறையில் எலியின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதனாலும் வெப்பம் குறைவான பகுதியாக குளியலறை காணப்படுவதனாலும்  எரிபொருளினை குளியலறையில் வைப்பதென்பது இயல்பான விடயமே தவிர  இது எரிபொருளினை பதுக்கும் நடவடிக்கை இல்லை. மண்ணெண்ணெய் நீர்இறைக்கும் இயந்திர பாவனைக்காக மிகக்குறைந்தளவிலான எண்ணெய் வைத்திப்பது எந்தவகையில் குற்றமாக கருதமுடியும் .

இவ் எரிபொருட்கள் அனைத்தும்  அத்தியாவசிய தேவைக்கு எமது பிரதேச செயலகத்தில் மிகக்குறைந்த அளவிலேயே காணப்பட்டுள்ளது.

எனவே எந்த வகையிலும் நியாயமில்லாத ஒருசிலரின் பேச்சை மட்டும் கருத்தில்  கொண்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால்  மேற்கொண்ட குறித்த செயலானது பிரதேச செயலாளர், அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அனைவருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதன் காரணமாக குறித்த செயலிற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் பொருட்டு  01 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று அனைத்து உத்தியோகத்தர்களும் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபடஉள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்