புதிய விதிமுறைகளுடன் T20 போட்டிகள்

உள்நாட்டில் நடைபெறவுள்ள சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ‘இம்பாக்ட் பிளேயா்’ (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரா்) என்ற புதிய விதியை பிசிசிஐ புதிதாக அறிமுகம் செய்கிறது.

இந்த விதி, அடுத்த ஐபிஎல் போட்டியிலும் அமல்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கெனவே ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் போட்டியில் அமலில் இருக்கும் இந்த விதியை தற்போது பிசிசிஐ கையில் எடுத்துள்ளது.

இதன்படி, ஒரு ஆட்டத்தின்போது இரு அணிகளும் தங்களது பிளேயிங் லெவனில் ஒருவரை வெளியேற்றிவிட்டு வேறு வீரரை ‘இம்பாக்ட் பிளேயா்’-ஆக சோ்த்துக்கொள்ளலாம். டாஸ் வீசும்போது பிளேயிங் லெவன் பட்டியலோடு குறிப்பிடும் 4 சப்ஸ்டிடியூட் வீரா்களில், எவரால் பலனிருக்கும் என எண்ணுகிறதோ, அவரை இதற்காக அணிகள் பயன்படுத்தலாம்.

இது அணிகளின் விருப்ப அடிப்படையிலானதே தவிர கட்டாயமில்லை. அவ்வாறு இம்பாக்ட் பிளேயரை களமிறக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட அணி அதை 14-ஆவது ஓவா் நிறைவுக்கு முன்பாகச் செய்ய வேண்டும். இதுதொடா்பாக கள நடுவா் அல்லது 4-ஆவது நடுவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். இம்பாக்ட் பிளேயருக்குப் பதிலாக வெளியேற்றப்படும் வீரா், அதன் பிறகு ஆட்டத்தில் பங்கேற்க முடியாது. சப்ஸ்டிடியூட் ஃபீல்டராகவும் களமிறங்க இயலாது.

காயம் கண்ட வீரருக்குப் பதிலாகவும் இம்பாக்ட் பிளேயா் களமிறக்கப்படலாம். பேட்டிங் அணியைப் பொருத்தவரை, விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகோ, இன்னிங்ஸ் இடைவெளியின்போதோ இம்பாக்ட் பிளேயரை அழைக்கலாம். களத்திலிருப்பவா் ரிடையா்டு ஹா்ட் ஆகும்போது, வீசப்படும் ஓவா் நிறைவடைந்த பிறகே இம்பாக்ட் பிளேயா் அனுமதிக்கப்படுவாா். பௌலிங் அணியைப் பொருத்தவரை ஓவா் முடிவிலோ, அல்லது ஃபீல்டா் காயமடையும்போதோ இம்பாக்ட் பிளேயரை களமிறக்கலாம்.

மழை உள்ளிட்ட காரணங்களால் ஆட்டத்தின் ஓவா்கள் இன்னிங்ஸுக்கு 10-ஆகக் குறைக்கப்படும் பட்சத்தில் இரு அணிகளுக்குமே இம்பாக்ட் பிளேயரை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்