
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் புதிய சட்டமூலம் ஒன்றினை தயாரிக்குமாறும், அவர்களுக்கான நலன்களை வழங்குவதற்கு ஒரு ஆணைக்குழுவை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறும் மாற்றுத்திறனாளிகள் ஐக்கிய முன்னணி அமைப்பினர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு புதிய சட்டமூலம் உருவாக்குதல் மற்றும் அந்த சமூகத்திற்கு இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து கலந்துரையாடும் விதமாக மாற்றுத்திறனாளிகள் ஐக்கிய முன்னணி பிரதிநிதிகள் நேற்று (15) நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
அந்த சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க 2019 இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதால் புதிய சட்டமூலம் உருவாக்கப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் ஐக்கிய முன்னணி பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்ததுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து அமைப்புகளுடனும் இணைந்து செயல்படுகிறது புதிய திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் வரைபில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இலங்கையில் சுமார் 1.7 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர். அவர்களின் பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவிக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், சகல தரப்பினதும் ஆலோசனைகளைப் பெற்று புதிய சட்டமூலத்தை தயாரிக்க வேண்டும் என தெரிவித்ததுடன் , ஏற்கனவே உள்ள வரைவில் மாற்றங்களைச் செய்வதற்கான பரிந்துரைகள் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்த பிறகு இறுதி வரைவு தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களை புதுப்பித்தல் பற்றிய கருத்துகள்பரிமாற்றம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீதிமன்றத்திற்கு செல்லும் வழக்குகளில் இதனால் ஏற்படும் சிரமங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர். புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து அரச நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.